Enable Javscript for better performance
தெற்கு தில்லி மாநகராட்சி மேயரானார் குஷிராம்- Dinamani

சுடச்சுட

    

    தெற்கு தில்லி மாநகராட்சி மேயர் பதவிக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த குஷிராம் வெற்றி பெற்றார். துணை மேயர் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து, பிரவீண் ராணா துணை மேயரானார்.

    தெற்கு தில்லி மேயர், துணை மேயர், நிலைக் குழுக்கான 3 உறுப்பினர்கள், கல்விக் குழுக்கான ஓர் உறுப்பினர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதற்காக நிதியாண்டின் முதலாவது கூட்டம் வடக்கு தில்லி மாநகராட்சியின் டாக்டர் ஷியாம்பிரசாத் முகர்ஜி மையத்தில் உள்ள அருணா ஆசஃப் அலி அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  

    இதில் மேயர் பதவிக்கு தரம்வீர் சிங் (காங்கிரஸ்), குஷி ராம் (பாஜக), ஜீவன் லால் (தேசியவாத காங்கிரஸ்), பூல் கலி (தேசியவாத காங்கிரஸ்) ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். துணை மேயர் பதவிக்கு பிரவீண் ராணா (காங்கிரஸ்), வீர் சிங் (பகுஜன் சமாஜ்), ஜீவன் லால் (தேசியவாத காங்கிரஸ்), பூல் கலி (தேசியவாத காங்கிரஸ்) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    தெற்கு தில்லி மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கு அபிஷேக் தத் (காங்கிரஸ்), குல்தீப் சோலங்கி (பாஜக), ஃபர்ஹாத் சூரி (காங்கிரஸ்), ராதேஷியாம் சர்மா (பாஜக), கல்விக் குழு உறுப்பினர் பதவிக்கு ஆசிஷ் சூட் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

    மேயர், துணை மேயர் பதவிகளுக்கு போட்டியிட மனு தாக்கல் செய்த ஜீவன் லால் (தேசியவாத காங்கிரஸ்), பூல் கலி (தேசியவாத காங்கிரஸ்) ஆகியோர் கடைசி நேரத்தில் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர். 

    இதைத் தொடர்ந்து,  மாநகராட்சி கூட்டம் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியதும், இதுவரை மேயர் பதவி வகித்துவந்த சரிதா செüத்ரி, மேயர் தேர்தலில் போட்டியிடும் குஷிராம் (பாஜக), தரம் வீர் சிங் (காங்கிரஸ்) ஆகிய இரு வேட்பாளர்களையும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து மேயர் தேர்தல் நடைபெற்றது. அதில், தெற்கு தில்லி மாநகராட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வாக்களித்தனர்.  இதில், மொத்தம் 101 மாநகராட்சி உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரமேஷ் குமார், மஹாபல் மிஸ்ரா, அஜய் மாக்கன் ஆகிய மூவரும் வாக்களித்தனர்.  மொத்தம் 104 வாக்குகள் பதிவாகின.

    இதில், முதலில் வாக்குகள் எண்ணப்பட்டபோது காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களுக்கு சமமான வாக்குகள் இருந்தன. இதையடுத்து, மீண்டும் எண்ணப்பட்டது. அதில், பாஜகவைச் சேர்ந்த குஷி ராமுக்கு 52 வாக்குகள் கிடைத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தரம் வீர் சிங்குக்கு 51 வாக்குகள் கிடைத்தன. ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

    துணை மேயர் தேர்தல்: இதைத் தொடர்ந்து துணை மேயர் தேர்தல் குறித்து புதிதாகப் பொறுப்பேற்ற மேயர் குஷிராம் அறிவித்தார். துணை மேயருக்கு நடைபெற்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஜீவன் லால் வேட்புமனுவை திரும்பப் பெற்றார். இதையடுத்து, பிரவீண் ராணா (காங்கிரஸ்), வீர் சிங் (பகுஜன் சமாஜ்) ஆகியோர் போட்டியிட்டனர். இதில், மொத்தம் 105 வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கையில் பிரவீண் ராணா 59 வாக்குகளும் வீர் சிங்கிற்கு 46 வாக்குகளும் கிடைத்தன. இதைத் தொடர்ந்து,  13 வாக்குகள் வித்தியாசத்தில் பிரவீண் ராணா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    நிலைக்குழு உறுப்பினர்: தெற்கு தில்லி மாநகராட்சியில் காலியாக இருந்த 3 நிலைக்குழு உறுப்பினர்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. அதில், அபிஷேக் தத் (காங்கிரஸ்), குல்தீப் சோலங்கி (பாஜக), ஃபர்ஹாத் சூரி (காங்கிரஸ்), ராதேஷியாம் சர்மா (பாஜக), கல்விக் குழு உறுப்பினர் பதவிக்கு ஆசிஷ் சூட் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், அபிஷேக் தத் வேட்புமனுவை திரும்பப் பெற்றதையடுத்து, குல்தீப் சோலங்கி, ஃபர்ஹாத் சூரி, ராதேஷியாம் சர்மா, கல்விக் குழு உறுப்பினர் பதவிக்கு ஆசிஷ் சூட் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மேயர் தேர்தல் வாக்குப்பதிவு பிற்பகல் 2.05 மணிக்குத் தொடங்கி 3.05 மணி வரை நடைபெற்றது. அதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் என்ற முறையில் மக்களவை உறுப்பினர்கள் அஜய் மாக்கன் (புது தில்லி), ரமேஷ் குமார் (தெற்கு தில்லி), சந்தீப் தீட்சித் (கிழக்கு தில்லி), மாநிலங்களவை உறுப்பினர் பர்வேஸ் ஹாஷ்மி ஆகிய நால்வருக்கும் வாக்குரிமை உண்டு.

    இதில், அஜய் மாக்கன் வாக்குப் பதிவு நிறைவடையும்போது வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார். இதனிடையே, கிழக்கு தில்லி மக்களவை உறுப்பினர் வந்துகொண்டிருப்பதாகவும் அதுவரை காத்திருக்க வேண்டும் எனவும் எதிர்கட்சித் தலைவர் ஃபராஹத் சூரி கோரிக்கை விடுத்தார். ஆனால், கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அப்போது சந்தீப் தீட்சித் வந்தார். அதனால், அவர் மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியாமல்போனது. ஆனால், துணை மேயர் தேர்தலில் வாக்களித்தார்.

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் முன்னாள் மேயர்கள் மீரா அகர்வால், சரிதா செüத்ரி உள்ளிட்டோர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், துணை மேயர், நிலைக் குழு உறுப்பினர்கள் ஆகியோரை வாழ்த்திப் பேசினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai