Enable Javscript for better performance
தலைமைத் தளபதியின்றி இந்திய கடற்படை! - Dinamani

சுடச்சுட

    

    இந்திய கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் தேவேந்திர குமார் ஜோஷி பதவி விலகி புதன்கிழமையுடன் (மார்ச் 26) ஒரு மாதமான பிறகும், அப் பதவிக்கு தகுதி வாய்ந்த அதிகாரி இன்னும் நியமிக்கப்படவில்லை. இதனால், கடந்த ஒரு மாதமாக தலைமைத் தளபதி இல்லாமலேயே செயல்பட்டு வரும் விநோத நிகழ்வை இந்திய கடற்படை வரலாறு பதிவு செய்துள்ளது.

    இந்திய கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல்கள் கடந்த ஓராண்டில் மட்டும் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில், 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பதவியில் நீடிக்க வேண்டிய தலைமைத் தளபதி அட்மிரல் டி.கே.ஜோஷி கடந்த மாதம் 26-ஆம் தேதி திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

    இதையடுத்து, தலைமைத் தளபதி பொறுப்பை கவனிக்கும்படி துணைத் தளபதி தோவான் கேட்டுக் கொள்ளப்பட்டார். புதிய தலைமைத் தளபதியைத் தேர்வு செய்யும் நடைமுறைகளை பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி இடம் பெற்றுள்ள பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை மேற்கொண்டது. ஆனால், மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் மார்ச் 5-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த நடத்தை விதிகள் கடற்படை தலைமைத் தளபதி நியமனத்துக்கும் பொருந்துமா என்ற சந்தேகம் மத்திய அரசுக்கு எழுந்தது. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் பாதுகாப்புத் துறை விளக்கம் கேட்டிருந்தது.

    இந்நிலையில், புதிய தலைமைத் தளபதியை நியமிக்க ஆட்சேபம் இல்லை என்று கடந்த திங்கள்கிழமை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியது.

    இதையடுத்து, மீண்டும் புதிய தலைமைத் தளபதியைத் தேர்வு செய்யும் பணியை பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை தொடங்கியுள்ளது. அதன்படி, புதிய தலைமைத் தளபதி தேர்வுக்கான பட்டியலில் மேற்கு கடற்படை பிராந்திய தளபதி வைஸ் அட்மிரல் சேகர் சின்ஹா, தலைமையக வைஸ் அட்மிரல் தோவான், கிழக்கு பிராந்திய தளபதி அனில் சோப்ரா, தெற்கு பிராந்திய தளபதி சதீஷ் சோனி ஆகியோரின் பெயர்களை பாதுகாப்புத் துறை பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. புதிய தலைமைத் தளபதி நியமிக்கப்படாததால், அலுவல்பூர்வமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பல பணிகள் இந்திய கடற்படையில் தேங்கியுள்ளது. மேலும், இந்திய பெருங்கடல் நாடுகளின் கடற்படைத் தளபதிகள் பங்கேற்கும் ஐந்து நாள்கள் கலந்தாய்வுக் கூட்டம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வரும் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது. அதில் இந்திய கடற்படை சார்பில் எவரும் அலுவல்பூர்வமாகக் கலந்து கொள்ளவில்லை.

    ஏற்கெனவே, சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பல் வாயு கசிவு சம்பவம், சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பலில் நிகழ்ந்த வெடிவிபத்து போன்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணையை கடற்படை உயரதிகாரிகள் எதிர்கொண்டு வருகின்றனர். இதனால், பல்வேறு துறை ரீதியான முக்கிய முடிவுகளை எடுக்க தற்போது பணியில் உள்ள உயரதிகாரிகள் தயங்குவதாகக் கூறப்படுகிறது. இந்த நெருக்குதல்கள் காரணமாகத்தான் டி.கே. ஜோஷி தார்மிக அடிப்படையில் பொறுப்பில் இருந்து விலகியதாக தனது ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai