Enable Javscript for better performance
தீவிரவாத வழக்குகளை விசாரிக்க காங்கிரஸ் தலைவர்கள் முட்டுக்கட்டை- Dinamani

சுடச்சுட

    

    தீவிரவாத வழக்குகளை விசாரிக்க காங்கிரஸ் தலைவர்கள் முட்டுக்கட்டை

    Published on : 27th March 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க காங்கிரஸ் தலைவர்கள் முட்டுக்கட்டை போடுகின்றனர் என்று பாஜக சாடியுள்ளது.

    இது குறித்து தில்லி பிரதேச பாஜகவின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் விஜய்குமார் மல்ஹோத்ரா புதன்கிழமை கூறியது:

    தீவிரவாதிகளின் இலக்கில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளரான நரேந்திர மோடி உள்ளது தெரிய வந்துள்ளது.

    அப்படியிருந்தும் மோடிக்குப் போதுமான பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் தீவிரவாதிகள் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டங்களை குறிவைத்து வருகின்றனர். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கலவரங்களை உருவாக்கத் திட்டமிடக்கூடும் என அஞ்சப்படுகிறது. இத்தகைய சூழலில் எதிர்க்கட்சி தலைவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு அளிக்க மறுப்பதுடன், தீவிரவாத வழக்குகளை விரைந்து விசாரிக்க காங்கிரஸ் தலைவர்கள் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.

    தில்லியில் சில பகுதிகளில் காவல் துறை நுழைந்து விசாரணை செய்ய முடியாத சூழல் உள்ளது. அப்படியே நுழைந்து விசாரணை செய்ய முற்பட்டாலும், அதைக் கண்டித்து அப் பகுதியில் உள்ளவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

    இத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர் என்றார் மல்ஹோத்ரா.

    ராஜஸ்தானில் இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த  இளைஞர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தில்லி ஜாமியா நகரில் இரு இளைஞர்களை போலீஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.

    இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் வருத்தத்தையும், கவலையையும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai