Enable Javscript for better performance
மேயர் தேர்தல்: பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ள 3 மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் களம் காணுகின்றன. இதனால் இரு கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. எனினும், தில்லியில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, மேயர் தேர்தலில் போட்டியிடாது எனத் தெரிகிறது. தலைநகரில் உள்ள வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி), கிழக்கு தில்லி மாநகராட்சி (ஈடிஎம்சி), தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) ஆகிய 3 மாநகராட்சிகளின் மேயர், துணை மேயர், நிலைக்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.

    கடந்த முறை நடைபெற்ற மேயர் தேர்தலில், 3 மாநகராட்சிகளையும் பாஜக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தில்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய் கூறுகையில், "3 மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நிலைக்குழு உறுப்பினர் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துகிறோம். இந்த முறையும் பாஜகவே 3 மாநகராட்சிகளிலும் வெற்றி பெறும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    கிழக்கு தில்லி மாநகராட்சியைக் கைப்பற்றுவதற்காக பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த மாநகராட்சி மேயர் தேர்தலில் கடந்த முறை, மிகக் குறைந்த வயதுடைய பாஜக வேட்பாளரான மீனாட்சி வெற்றி பெற்றார்.

    ஆம் ஆத்மி போட்டியிடவில்லை?: இதனிடையே, நடப்பு மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடப்போவதில்லை என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    மொத்தம் 5 ஆண்டுகள் காலவரையறை கொண்ட மேயர் பதவி, ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    முதலாம் ஆண்டு பெண்களுக்கும், 2ஆம் ஆண்டு பொதுப் பிரிவுக்கும், 3ஆம் ஆண்டு இடஒதுக்கீடு செய்யப்பட்ட பிரிவினருக்கும், எஞ்சிய 2 ஆண்டுகள் மீண்டும் பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று வடக்கு தில்லி மாநகராட்சி இயக்குநர் யோகேந்திர சிங் மான் கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai