Enable Javscript for better performance
அரவிந்தர் ஆசிரமத்துக்கு எதிரான மனு: மார்ச் 19-க்கு விசாரணை ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரவிந்தர் ஆசிரமத்துக்கு எதிரான மனு: மார்ச் 19-க்கு விசாரணை ஒத்திவைப்பு

    By புது தில்லி  |   Published on : 28th January 2015 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லி, ஜன. 27: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்துக்கு எதிரான வழக்கு விசாரணையை வரும் மார்ச் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

     புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் கொடுமைகள், நிதி முறைகேடுகள் நடப்பது தொடர்பாகக் கூறி அந்த ஆசிரமத்தின் மருத்துவரான டாக்டர் காயத்ரி சதாபதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

     இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜிவ் தவான் வாதிடுகையில், "புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் பல முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன.

    ஏற்கெனவே, ஆசிரமத்துக்கு எதிராக இதுபோன்ற முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி விஸ்வநாதய்யர் என்பவர் தலைமையிலான குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. ஆனால், விசாரணையின்போதே அவர் உயிரிழந்து விட்டார்.

     அதற்குபின், அரவிந்தர் ஆசிரம முறைகேடு விவகாரங்களை விசாரிக்கும் குழுவின் தலைவரை உச்சநீதிமன்றம் நியமிக்கவில்லை. எனவே, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு ஒன்றை அமைத்து உரிய விசாரணை நடத்த உடனே வழிவகை செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

     அவரது கோரிக்கையை பரிசீலித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, "இந்த விவகாரத்தில் உடனடியாக விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட முடியாது.

    உங்கள் மனு மீதான அடுத்த விசாரணையை வரும் மார்ச் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்' என்றார்.

    பின்னணி: அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் கொடுமைகள், ஆசிரமத்தில் நிதி முறைகேடுகள், ஆசிரமத்துக்கு சொந்தமான சொத்துகளை ஆசிரம நிர்வாகிகள் சிலர் தங்களது சொந்த லாபத்திற்காக சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக புகார்கள் உள்ளன.

    இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் காயத்ரி சதாபதி பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் முறைகேடு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும், ஆசிரம நிர்வாகத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

     இந்த மனுவை 2014, ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், இது குறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

    இதையடுத்து அரவிந்தர் ஆசிரம விவகாரங்கள் தொடர்பான புகார்கள் மீது நியாயமான விசாரணை நடத்த தயாராக இருக்கிறோம் என்று உச்சநீதிமன்றத்தில் கடந்த 16-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசு கூறியிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai