Enable Javscript for better performance
ஆள் பற்றாக்குறையைச் சமாளிக்க ஒப்பந்த அடிப்படையில் சிஏ, வழக்குரைஞர்களுக்குப் பணி- Dinamani

சுடச்சுட

    

    ஆள் பற்றாக்குறையைச் சமாளிக்க ஒப்பந்த அடிப்படையில் சிஏ, வழக்குரைஞர்களுக்குப் பணி

    By புது தில்லி  |   Published on : 28th January 2015 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லி, ஜன. 27: தில்லி வளர்ச்சி ஆணையத்தில் (டிடிஏ) ஒவ்வொரு மாதமும் 150 ஊழியர்கள் பணி ஓய்வு பெற்று வருவதால் ஏற்பட்டுள்ள ஆள் பற்றாக்குறையைச் சமாளிக்க ஒப்பந்த அடிப்படையில் சி.ஏ., வழக்குரைஞர்களுக்குப் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

     தில்லியில் அரசு நிலங்களை பராமரித்து வரும் தில்லி வளர்ச்சி ஆணையம் (டிடிஏ) மூலம் பல்வேறு வீட்டு வசதித் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், டிடிஏவில் மாதம்தோறும் ஏராளமானோர் பணியிலிருந்து ஓய்வுபெற்று வருவதால், இந்நிறுவனத்தில் உள்ள பல்வேறு துறைகளின் பணிகளை மேற்கொள்வதில் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் இளநிலை, முதுகலைப் பட்டதாரிகளுக்கு பணி அளிக்கும் நடவடிக்கையை டிடிஏ நிர்வாகம் தொடங்கியுள்ளது.  இதுகுறித்து டிடிஏ அதிகாரி ஒருவர் கூறியதாவது: தில்லி வளர்ச்சி ஆணையத்தின் தேர்வுக் குழு மூலம் பல்வேறு பணியிடங்களுக்கு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

    தற்போது மாதம்தோறும் சுமார் 150 ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்று வருவதால், அதனால் ஏற்படும் ஆள்பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் டிடிஏ நிர்வாகத்தின் சட்டம், பட்டயக் கணக்குத் துறை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளநிலை, முதுகலைப் பட்டம் பயின்ற இளம் பட்டதாரிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்த முக்கியத்துவம் அளிக்குமாறு தேர்வுக் குழுவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

     தற்போது டிடிஏவில் 15 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 60 சதவீதம் பேர் வரை 50 வயதைக் கடந்தவர்கள். தோராயமாக மாதம்தோறும் 150 ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வுபெற்று வருகின்றனர்.

    இதனால், டிடிஏ ஊழியர்களின் பலம் தற்போது 13,200 ஆக குறைந்துவிட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் 30 சதவீதம் பேர் பணி ஓய்வு பெற்றுவிடுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

     இதனால், திறமையான இளம் தொழில்முறை வல்லுநர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தி, அவர்களிடம் நம்பிக்கை, ஊக்குவிப்பை ஏற்படுத்தி நிரந்தரப் பணி வாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    டிடிஏவின் வழக்கமான ஆள் தேர்வு நடைமுறையில் எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவையும் உள்ளடங்கும். தற்போது ஒப்பந்த முறையில் ஆள்களைத் தேர்வு செய்யும் நடைமுறை தொடங்கிவிட்டது. ஏற்கெனவே, டிடிஏவின் நிதி மற்றும் சட்டத் துறைகளில் தோராயமாக 30 வயதுடைய 50 ஊழியர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

     மேலும், ஒப்பந்த அடிப்படையில் திட்டமிடல், கட்டடவியல் துறைகளில் அடுத்த நான்கு மாதங்களில் மேலும் பலரை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக பட்டம் பெற்று வருவோர் புதுமையான சிந்தனைகளுடன் வருகின்றனர்.

    டிடிஏவில் பணி பாதுகாப்புக்கான உத்தரவாதம் அவர்களுக்கு இருப்பதால், இதுபோன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

     காலிப் பணியிடங்களுக்காக விளம்பரம் செய்யும் போதெல்லாம் ஏராளமான விண்ணப்பங்கள் வருவதன் மூலம் இதை அறிய முடிகிறது. சட்டம் அல்லது நிர்வாகப் படிப்பு பட்டதாரிகள் கூட விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

     ஒப்பந்த முறையில் வேலைக்குச் சேருவோரின் தரமான பணி அடிப்படையில் அவர்களுக்கு நிரந்தப் பணிவாய்ப்பும் உள்ளது என்றார் அந்த அதிகாரி.

     இதுகுறித்து டிடிஏ துணைத் தலைவர் பல்விந்தர் குமார் கூறுகையில், "இந்த நடவடிக்கையானது பொதுமக்கள் பிரச்னைகளுக்கான பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ள ஊழியர்களை தயார்படுத்தும். மேலும், செயல்திறன், தரமான பணி ஆகியவையும் மேம்படும்' என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai