Enable Javscript for better performance
ஒபாமா வருகையால் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகரிப்பு: கிரண் பேடி- Dinamani

சுடச்சுட

    

    ஒபாமா வருகையால் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகரிப்பு: கிரண் பேடி

    By புது தில்லி  |   Published on : 28th January 2015 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்துகொண்டதன் மூலம், மக்களிடையே பாஜகவுக்கான செல்வாக்கு அதிகரித்துள்ளதாக அக்கட்சியின் முதல்வர் பதவி வேட்பாளர் கிரண் பேடி கூறியுள்ளார்.

    இதுகுறித்து, தலைநகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பேசுகையில், "இரு நாடுகளிடையேயான நல்லுறவுக்காக பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முயற்சியின் காரணமாகவே அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தார். இது, கட்சிக்கான செல்வாக்கை மக்களிடையே அதிகரித்துள்ளது' என்று கிரண் பேடி கூறினார்.

    இதனிடையே, தில்லி வாக்காளர்களை ஈர்ப்பதற்கு ஒபாமாவின் வருகையை பாஜக பயன்படுத்துவதாகக் கூறி, ஆம் ஆத்மி கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    ஆம் ஆத்மி கருத்து: இதுகுறித்து, ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில், "கிரண் பேடியின் இந்தப் பேச்சு மூலம், பாஜகவின் அமைதியின்மை மற்றும் ஆதரவின்மை வெளிப்படுகிறது.

    தங்களுக்கான மக்கள் ஆதரவை பெற இயலாத காரணத்தால், மக்களை ஈர்ப்பதற்காக ஒபாமா வருகையை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இதற்குப் பதிலாக, பாஜகவினர் ராம்லீலா மைதானத்தில் ஒரு பிரசாரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, அதில் ஒபாமாவை பேச வைக்கலாம் என்று கருதுகிறேன்' என்றார்.

    காங்கிரஸ் கருத்து: இதனிடையே, கிரண் பேடியின் பேச்சு குறித்து தில்லி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைமை செய்தித் தொடர்பாளர் முகேஷ் சர்மா கூறியதாவது:

    பாஜக அனைத்தையும் அரசியல் ஆதாயத்துக்காக எடுத்துக்கொள்கிறது. கிரண் பேடியின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்கிறது. அவரது பேச்சு, பாஜகவுக்கு உள்ள தேர்தல் தோல்வி பயத்தை காட்டுகிறது என்று முகேஷ் சர்மா கூறினார்.

    பாஜக பதில்: இந்நிலையில், கிரண் பேடியின் கருத்துக்கு பிற கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பிரதா கூறுகையில், "ஒபாமாவை ஒரு பிரசாரப் பொருளாக கிரண் பேடி பயன்படுத்தவில்லை. மத்தியில் நாங்கள் உருவாக்கிய வரலாற்றை சரியான முறையில் அவர் எடுத்துக் கொண்டுள்ளார்' என்றார்.

    தில்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய் கூறுகையில், "ஒபாமாவின் வருகை தில்லி பேரவைத் தேர்தலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. அவரது வருகையை தேர்தலுடன் தொடர்புப்படுத்தக் கூடாது' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai