Enable Javscript for better performance
புதிய பயிர் வருவாய் காப்பீட்டுத் திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும்: எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி- Dinamani

சுடச்சுட

    

    புதிய பயிர் வருவாய் காப்பீட்டுத் திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும்: எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி

    By புது தில்லி  |   Published on : 28th January 2015 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "மத்திய அரசு முன்மொழிந்துள்ள தேசிய பயிர் வருவாய் காப்பீட்டுத் திட்டம் எனும் பெயரிலான புதிய திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவர். இதனால், அத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது' என்று மாநில வேளாண் அமைச்சர்கள் கூட்டத்தில் தமிழக வேளாண் துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தினார்.

    புது தில்லியில் தேசிய பயிர் வருவாய் காப்பீட்டுத் திட்டம் (என்சிஐஐஎஸ்) குறித்து மாநில வேளாண்மைத் துறை அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றுப் பேசியதாவது:

    மத்திய அரசால் உத்தேசிக்கப்பட்ட "மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம்' (எம்என்ஏஐஎஸ்) செயல்படுத்துவதற்கு ஆட்சேபம் தெரிவித்து கடந்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

     மேலும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் அதிகரித்துள்ள பிரீமியம் முழுவதும் மத்திய அரசால் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தார். கடந்த 2014-15-ஆம் ஆண்டுக்கான தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆகவே, தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்துவது தொடர அனுமதிக்கப்பட வேண்டும்.

     அதேபோன்று, முன்மொழியப்பட்டுள்ள புதிய தேசிய பயிர் வருவாய் காப்பீட்டுத் திட்டம்

    (என்சிஐஐஎஸ்) என்ற பெயரிலான புதிய திட்டமும் விவசாயிகளைப் பாதிக்கும் என்பதால் அத் திட்டம் செயல்படுத்தப்படக் கூடாது என்றார் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி.

     இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறைச் செயலர் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் ராஜேஷ் லக்கானி, வேளாண்மைத் துறை இயக்குநர்

    எம். ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai