Enable Javscript for better performance
லியாகத் ஷா கைது விவகாரம்: தில்லி காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை முடிவு- Dinamani

சுடச்சுட

    

    லியாகத் ஷா கைது விவகாரம்: தில்லி காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை முடிவு

    By புது தில்லி  |   Published on : 28th January 2015 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜம்மு-காஷ்மீர் மாநில அரசின் மறுவாழ்வுத் திட்டத்தின்கீழ் சரணடைய வந்த லியாகத் ஷாவை பயங்கரவாதி என்றும், தலைநகரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த வந்தவர் என்றும் கூறி வழக்கு ஜோடித்த தில்லி காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து மத்திய உள்துறை உயரதிகாரி கூறியதாவது: "காஷ்மீரில் மறுவாழ்வுத் திட்டத்தின்படி சரண் அடைய வந்த லியாகத் ஷாவை பிஹார் மாநில எல்லையில் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த ஆண்டு கைது செய்தனர்.

    அவரை தில்லிக்கு அழைத்து வந்து ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும், தில்லியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்றதாகவும் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு பின்னர் என்ஐஏ (தேசிய புலனாய்வு ஏஜென்சி) வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இதில், தில்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த என்ஐஏ, "லியாகத் ஷாவுக்கு தற்போது பயங்கரவாத பின்னணி ஏதுமில்லை. அவரை சிக்க வைக்க, ஜாமா மசூதி அருகே ஒரு விடுதியில் சபீர் கான் என்பவர் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளது.

    இதனால், இந்த விவகாரத்தில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் வகையில், தில்லி காவல்துறை அதிகாரிகள் லியாகத் ஷாவை ஏன் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று சித்திரிக்க முயன்றனர் என்ற சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் யார் இருந்தனர்? எதற்காக அதிகாரிகள் இவ்வாறு செயல்பட்டனர்? என்பது குறித்து மத்திய உளவுத் துறை மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதன் அறிக்கை வந்ததும், தவறு செய்த, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பயங்கரவாத வழக்குகளில் மிகவும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்பட மாநில காவல்துறைக்கு ஏற்கெனவே சில வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அளித்துள்ளது.

    லியாகத் ஷா சம்பவத்துக்குப் பிறகு, இந்த வழிகாட்டுதல்களை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என மீண்டும் வலியுறுத்த உள்துறை முடிவு செய்துள்ளது' என்று உயரதிகாரி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai