வாழும் கலை அமைப்பின் "உலக கலாசார திருவிழா' நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதன் மூலம் தில்லி அரசும், மத்திய அரசும் விதிகளை மீறியுள்ளதாக ஸ்வராஜ் அபியான் அமைப்பு விமர்சித்துள்ளது.
இதுகுறித்து, ஸ்வராஜ் அபியான் அமைப்பின் மூத்த தலைவரும், மூத்த வழக்குரைஞமான பிரசாந்த் பூஷண் தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
தில்லி அரசும், மத்திய அரசும் விதிகளை மீறிய வகையில் உலக கலாசார நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதன் மூலம் சுற்றுச்சூழலை அழிக்க ஒருங்கிணைந்து வழிவகுத்துள்ளன. சேதமடைந்த குழாய்களைக் கொண்டு அந்த நிகழ்ச்சிக்கு மேடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பர்?
பிரதமர் நரேந்திர மோடியும், தில்லி முதல்வர் கேஜரிவாலும் லோக்பாலுக்கு அனுமதி அளிப்பதில்லை என்று உறுதி பூண்டுள்ளனர் என்று பிரசாந்த் பூஷண் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு தலைவரான யோகேந்திர யாதவ் இதுகுறித்து கூறுகையில், "இதில் நல்ல செய்தி என்னவென்றால் தில்லி அரசும், மத்திய அரசும் இந்த விவகாரத்தில் ஒன்றிணைந்துள்ளன. கெட்ட செய்தி என்னவென்றால், ஒன்றிணைந்துள்ள அவர்கள், சுற்றுச்சூழலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.