மக்களவையில் அதிமுக உறுப்பினர் வியாழக்கிழமை எழுப்பிய கேள்விக்கு தொடர்பில்லாத பதிலை மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தது அதிமுக உறுப்பினர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மக்களவை வியாழக்கிழமை காலையில் அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் கூடியதும், உறுப்பினர்கள் வழக்கம்போல துணைக் கேள்விகளை எழுப்பினர். அப்போது, திருவண்ணாமலை தொகுதி அதிமுக உறுப்பினர் ஆர். வனரோஜா, "நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிறுவனங்கள் மூலம் மேற்
கொள்ளப்பட்டு வரும் சாலைத் திட்டங்கள் பல முடிவுறாமல் உள்ளன.
இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டே சாலை பராமரிப்பை தனியார் மயமாக்கும் முன்மொழிவை தமிழக முதல்வர் வரவேற்றார். ஆகவே, நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைத் திட்டங்கள்
மேம்பாட்டுக்காக மத்திய அரசு தனது சொந்த நிதியை அளிக்க பரிசீலீக்கிறதா?' என்று ஆங்கிலத்தில் துணைக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் நிதின் கட்கரி, "பெரிய துறைமுகங்கள் மற்றும் சிறிய துறைமுகங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. நாட்டில் 12 பெரிய அளவிலான துறைமுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும், சிறிய அளவிலான துறைமுகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளுக்காக "பாரத் மாலா' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் துறைமுகங்களை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்று ஹிந்தியில் பதில் அளித்தார்.
இதை கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.என். ராமச்சந்திரன் அமைச்சரின் பதில் கேள்விக்கு தொடர்பில்லாமல் உள்ளது என சுட்டிக் காட்ட முயன்றார். வனரோஜாவும், "நான் வேறு கேள்வியை எழுப்பினேன்' எனக் குறிப்பிட்டார்.
அதற்குள் வேறு உறுப்பினர் கேள்வி எழுப்ப மக்களவைத் தலைவர் அனுமதி அளித்துவிட்டார். அதிமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு தொடர்பில்லாத வேறு பதிலை அமைச்சர் நிதின் கட்கரி அளித்தது சக உறுப்பினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.