Enable Javscript for better performance
தில்லி தமிழ்ச் சங்க 71ஆம் ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    தில்லி தமிழ்ச் சங்கத்தின் 71ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் வி.பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மகேஷ் கிரி பங்கேற்றார்.

    அவர் பேசுகையில், "எதற்காக தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டதோ, அந்தப் பணியை நன்றாக நிறைவேற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தைவிட்டு இங்கு வந்து குடியேறியுள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளிடம் தமிழில் பேசுங்கள். அவர்களுக்கு தமிழின் தொன்மையையும், தமிழகத்தின் பண்பாட்டையும் சொல்லிக் கொடுங்கள்' என்றார் அவர்.

    ஏ.பி.ஜி. பல்கலை. முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பி.ராமசாமி, சிம்லா ஆகியோரும் பேசினர். தில்லி தமிழ்ச் சங்கம் தனது கொள்கைகளை மறக்காமல் செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தனர்.

    தில்லி தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் கே.வி.கே. பெருமாள் பேசுகையில், சங்கம் பெரிய அளவில் உருவாகப் பாடுப்பட்ட சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

    தில்லி முத்தமிழ்ப் பேரவைப் பொதுச் செயலாளர் இரா.முகுந்தன் பேசுகையில் "வாராணசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை நினைவுச் சின்னமாக அறிவிக்க நாடாளுமன்ற நிலைக் குழுவின் உறுப்பினராக உள்ள மகேஷ் கிரி எம்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பதாக எம்.பி. உறுதி அளித்தார்.

    தில்லி தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.கண்ணன் வரவேற்றுப் பேசினார். இணைச் செயலாளர்கள் பி.குருமூர்த்தி, சத்யா அசோகன், இணைப் பொருளாளர் அ.ஜெயமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை செயற்குழு உறுப்பினர் வெ.முத்துக்குமார் தொகுத்து வழங்கினார். செயற்குழு உறுப்பினர் ஜி.பாலுச்சாமி நன்றி கூறினார். நிகழ்ச்சியையொட்டி,  புதுக்கோட்டையை சேர்ந்த டால்பின் இசைக் குழுவினரின் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai