Enable Javscript for better performance
ஹரித்வாரில் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களுக்கு உணவு வழங்கியது சாஸ்த்ரா பல்கலைக்கழகம்- Dinamani

சுடச்சுட

    

    ஹரித்வாரில் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களுக்கு உணவு வழங்கியது சாஸ்த்ரா பல்கலைக்கழகம்

    By புது தில்லி  |   Published on : 15th April 2016 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் நடைபெறும் அர்த்த கும்ப மேளாவையொட்டி, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் 25 ஆயிரம் பேருக்கு வியாழக்கிழமை உணவுப் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

    ஹரித்வாரில் கடந்த ஜனவரி 14 முதல் அர்த்த கும்ப மேளா நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் 8ஆவது நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் கங்கையில் புனித நீராடினர். நீராடிவிட்டு வரும் பக்தர்களுக்கும் சாதுகளுக்கும் தஞ்சாவூரில் அமைந்துள்ள சாஸ்தரா பல்கலை. சார்பில் உணவுப் பாக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதன்படி, பவன் தாம், ரிஸிகுல் ஆகிய இரு பகுதிகளிலும் சமையலர்கள் மூலம் உணவு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது. 6 பூரி, சப்ஜி, ஊறுகாய், பச்சை மிளாகாய் அடங்கிய உணவுப் பாக்கெட் பக்தர்களுக்கும், சாதுக்களுக்கும் வழங்கப்பட்டன. இந்தப் பணியில் ரிஸிகேஸ் தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தின் தன்னார்வத் தொண்டர்கள், ஹரித்வார் குருகுல் காங்கிரி பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஈடுபட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தின் பொது மேலாளர் குணா நந்த் ரயால், சாஸ்த்ரா பல்கலை. அலுவலகப் பணியாளர் எஸ்.நடராஜன், குருகுல் காங்கிரி  பல்கலைக்கழக பேராசிரியர் ரூப் கிஸோர் சாஸ்திரி,  சாஸ்தரா பல்கலை. பிஹெச்டி  மாணவி புரந்தி ரூப் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     ஹரித்வாரில் உள்ள பிரேம் நகர் ஆஸ்ரம், அப்பர் ரோடு, ஹர் கி பேடி, பீம் கோடா, நீல்தாரா, பவன் தாம், ரிஸிகுல் உள்ளிட்ட இடங்களில் உணவுப் பாக்கெட்டுகள்  வழங்கப்பட்டன.

    இது குறித்து சாஸ்தரா பல்கலை. துணைவேந்தர் ஆர். சேதுராமன் கூறியதாவது: சாஸ்த்ரா பல்கலை. சார்பில் கும்பகோணம் மகா மகம்  திருவிழாவின் போது ஒரு லட்சம் பேருக்கு இலை போட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கடந்த மாதம் நாகூர் கந்தூரி விழாவிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோன்று, தஞ்சாவூர் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு காரைக்குடி பகுதியில் இருந்து ஆண்டுதோறும் பக்தர்கள் பாதயாத்திரை வருவது வழக்கம். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதுண்டு. இந்த ஆணடு வரும் 24-ஆம் தேதி மாலை வரும் பாதயாத்திரை பக்தர்கள் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

    ஹரித்வாரில் முதல் முறையாக அன்னதானம் வழங்க முயற்சி மேற்கொண்டோம். இதற்கு அர்த்த கும்ப மேளா அதிகாரி எஸ்.ஏ. முருகேசன் ஊக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து, 25 ஆயிரம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள் ரூ.15 லட்சம் செலவில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அடுத்த முறை ஒரு ஜாங்கிரி இனிப்புடன் அன்னதானம் வழங்க திட்டமிட்டுள்ளோம். தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில், இதுபோன்று முக்கிய விழாக்களில் சாஸ்தரா பல்கலை. சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai