Enable Javscript for better performance
தேசியக் கொடியை அவமதிக்கும் செயல்களில்  ஈடுபடக் கூடாது: மத்திய உள்துறை அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தேசியக் கொடியை அவமதிக்கும் செயல்களில்  ஈடுபடக் கூடாது: மத்திய உள்துறை அறிவுறுத்தல்

    By dn  |   Published on : 15th August 2016 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லி:  நம் நாட்டின் தேசியக் கொடி மற்றும் தேசியச் சின்னங்களை அவமதிக்கும் செயல்களில் பொதுமக்கள் யாரும் ஈடுபடக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
     இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய கொடி கோட்பாடு 2002, தேசியச் சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971 பிரிவு 2-இன்படி, தேசிய சின்னங்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பொது இடங்களில் தேசியக் கொடியை எரிப்பது, சேதம் விளைவிப்பது, இழிவுப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை, அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகுக்கப்பட்டுள்ளது.
     தேசியக் கொடிக்கும், தேசியச் சின்னங்களுக்கும் உரிய மரியாதை அளிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை மேற்கொள்ள மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தேசிய, கலாசார, விளையாட்டு விழாக்கள் நடைபெறும் போது பிளாஸ்டிக், காகிதங்களாலான தேசியக் கொடியை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், நிகழ்வுகள் முடிவுற்ற பிறகு தேசியக் கொடியை பலர் தூக்கி எறிந்துவிட்டுச்  செல்கின்றனர். எனவே, தேசியக் கொடிக்கு உரிய கண்ணியமும் மரியாதையும் அளிக்கும் வகையில் அவற்றைத் தூக்கி எறியாமல், முறையாக அகற்ற பொதுமக்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.
     மேலும், மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தினால், நிலம் மாசு அடையும் நிலை உருவாகும். எனவே, சுதந்திர தினத்தன்று பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai