Enable Javscript for better performance
முறையாக பதிலளிக்குமாறு மல்லையாவுக்கு தில்லி நீதிமன்றம் அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    முறையாக பதிலளிக்குமாறு மல்லையாவுக்கு தில்லி நீதிமன்றம் அறிவுறுத்தல்

    By புது தில்லி  |   Published on : 21st May 2016 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அன்னியச் செலாவணி ஒழுங்குமுறை விதிகளை மீறியதாக கிங்பிஃஷர் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், முறையாக பதிலளிக்குமாறு அவருக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

    தனது மதுபான நிறுவனத்தை வெளிநாடுகளில் விளம்பரப்படுத்துவதற்காக பிரிட்டனில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக கடந்த 2000ஆம் ஆண்டு, மார்ச் 8-ஆம் தேதி, விஜய் மல்லையாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    அதையடுத்து, அவரை நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால், அந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்குமாறு விஜய் மல்லையா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவருக்கு அந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து நீதிமன்றம் விலக்கு அளித்தது.

    அந்த உத்தரவை நீதிமன்றம் விலக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன், இந்த வழக்கில் பிணையில் வெளிவர இயலாத பிடியாணையை அவருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

    அந்த மனு வெள்ளிக்கிழமை நீதிபதி சுமித் தாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு விஜய் மல்லையாவின் வழக்குரைஞர் கோரினார். அதற்கான மனுவில் விஜய் மல்லையாவின் கையொப்பம் இல்லாத காரணத்தால், அவரது வேண்டுகோளை ஏற்க நீதிபதி மறுத்தார்.

    அதைத் தொடர்ந்து, அவரின் கையொப்பத்துடன் மனு தாக்கல் செய்ய வழக்குரைஞர் அவகாசம் கோரினார். பின்னர், இம்மாதம் 28ஆம் தேதிக்கு இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai