Enable Javscript for better performance
"ஒரு நாள்' கனடா தூதரானார் ஜெய்ப்பூர் மாணவி!- Dinamani

சுடச்சுட

    

    ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த 20 வயது பொறியியல் மாணவி மேதா மிஸ்ரா, வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் கனடா நாட்டின் தூதராக பணியாற்றினார்.
    சர்வதேச பெண் குழந்தைகள் தினம் வரும் 11-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, தில்லியிலுள்ள கனடா தூதரகம் சார்பில் முகநூல் வாயிலாக இந்திய பெண்களுக்கு ஒரு போட்டி நடத்தப்பட்டது.
    அதன்படி, "பெண் குழந்தைகளுக்கான உரிமைகளுக்கு ஏன் முக்கியத்துவம் தர வேண்டும்? ஆண்-பெண் சமத்துவத்தை எட்ட என்னென்ன செய்ய வேண்டும்?' ஆகிய கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு சிறப்பாக பதிலளிப்பவருக்கு ஒரு நாள் கனடா தூதராக பணியாற்றும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    இப்போட்டியில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த பொறியியல் மாணவி மேதா மிஸ்ரா (20) வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, வெள்ளிக்கிழமையன்று கனடா தூதராக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
    இந்தியாவுக்கான கனடாவின் துணைத் தூதர் ஜெஸ் தத்தனுடன் இணைந்து, பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் மேதா மிஸ்ரா பங்கேற்றார்.
    பெண் குழந்தைகளின் உரிமைகளை வலியுறுத்தி, தில்லியிலுள்ள சாந்தி பாதையில் நடைபெற்ற விழிப்புணர்வு ஓட்டத்தில், பல்வேறு நாடுகளின் தூதரக ஊழியர்களுடன் இணைந்து மேதா பங்கேற்றார்.
    அதுமட்டுமின்றி, ஆண்-பெண் சமத்துவம் தொடர்பாக, தில்லியிலுள்ள இந்திய திட்டமிடல் மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎல்எம்) நடைபெற்ற கருத்தரங்கில் மேதா பங்கேற்று பேசினார்.
    இந்நிகழ்ச்சியில், மெக்ஸிகோ தூதர் மெல்பா பிரையா, அமெரிக்கத் தூதர் ரிச்சர்டு வர்மா, தென்ஆப்ரிக்க துணைத் தூதர் சிரிஸ் எல்சாஃப்ட், பின்லாந்து தூதர் நினா வாஸ்குன்லாடி உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினர்.
    இதுதொடர்பாக, மேதா மிஸ்ரா கூறுகையில், "நான் அடிப்படையிலேயே பெண்ணிய சிந்தனை கொண்டவள். பெண் குழந்தைகள் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று, ஒரு நாள்
    கனடா தூதராக பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன். தூதர் பதவி
    யென்பது எளிதானது அல்ல என்பதை இன்று நான் உணர்ந்து கொண்டேன். இந்த வாய்ப்பு கிடைத்தது, மிகுந்த மகிழ்ச்சி' என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai