Enable Javscript for better performance
சிசோடியாவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை அழைப்பாணை: டிசிடபிள்யூ நியமனங்களில் முறைகேடு விவகாரம்- Dinamani

சுடச்சுட

    

    சிசோடியாவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை அழைப்பாணை: டிசிடபிள்யூ நியமனங்களில் முறைகேடு விவகாரம்

    By DIN  |   Published on : 08th October 2016 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் மேற்கொண்ட பல்வேறு நியமனங்களில் நிகழ்ந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரித்து வரும் தில்லி லஞ்ச ஒழிப்புத் துறை, தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
    தில்லி மகளிர் ஆணையத்தில் 85 பேர் நியமிக்கப்பட்ட விவகாரத்தில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஆணையத்தின் முன்னாள் தலைவர் பர்கா சிங் தில்லி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கடந்த மாதம் புகார் அளித்திருந்தார்.
    இதன்பேரில் தில்லி மகளிர் ஆணையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, ஸ்வாதி மாலிவாலிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவருக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13 (டி) பிரிவு, பிரிவு 409 (நம்பிக்கை மோசடிக் குற்றம்), பிரிவு 120பி (குற்றச் சதியில் ஈடுபடுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்புடைய முதல் தகவல் அறிக்கையில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.
    இதுகுறித்து முதல்வர் கேஜரிவால், "தில்லி மகளிர் ஆணையத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நியமன முறைகேடு விவகாரத்தில் அதன் தலைவர் ஸ்வாதி மாலிவாலுடன் எனது பெயரும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. பிரதமரின் அனுமதி இல்லாமல் இதுபோல ஒரு முதல்வரின் பெயரைச் சேர்க்க முடியாது. இந்த விவகாரத்தில் பின்னணியில் உள்ள சதி குறித்து தில்லி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும்' என்று தெரிவித்திருந்தார். எனினும், செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற சட்டப் பேரவையின் ஒரு நாள் சிறப்புக் கூட்டத்தில் அதுபற்றி ஏதும் விவாதம் நடைபெற வில்லை.
    இது குறித்து பின்னர் கேஜரிவால் கூறுகையில், "எல்லையோரக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ராணுவம் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிப்பது சரியாக இருக்காது' என்று தெரிவித்திருந்தார்.
    இச்சூழ்நிலையில், டிசிடபிள்யூ நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு தில்லி லஞ்ச ஒழிப்புத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
    இதுகுறித்து தில்லி லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைவர் முகேஷ் மீனா கூறுகையில், "தில்லி மகளிர் ஆணைய நியமனம் தொடர்பாக விசாரிப்பதற்காக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 14-ஆம் தேதி அவரிடம் விசாரணை நடத்தப்படும்' என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai