Enable Javscript for better performance
சொத்துக் குவிப்பு வழக்கில் காவல் துறை முன்னாள் அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    சொத்துக் குவிப்பு வழக்கில் காவல் துறை முன்னாள் அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை

    By DIN  |   Published on : 08th October 2016 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் சொத்துச் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், தில்லி காவல் துறையின் முன்னாள் துணை ஆணையருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
    இது குறித்த வழக்கு விவரம் வருமாறு:
    1993-ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி புபீந்தர் சிங் போலா. இவர் புதுச்சேரி டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், வருமானத்திற்கு பொருந்ததாக வகையில் சொத்து சேர்த்ததாக புபீந்தர் சிங் போலா மீது மத்திய புலனாய்வுத் துறையினருக்கு (சிபிஐ) புகார் வந்தது.
    இதையடுத்து, புபீந்தர் சிங் போலாவின் தில்லி குடியிருப்பில் 2001, ஜூலை 6-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ரூ.2,38,600 மதிப்புள்ள ஆடைகள் உள்பட ரூ.16,03,216 மதிப்பிலான சொத்துகளை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர்.
    இதைத் தொடர்ந்து, இச்சொத்துகள் அவருக்கு எந்த வகையில் வந்தது என்பது குறித்து சிபிஐ விசாரணை நடத்தியதாகவும், அதற்கு புபீந்தர் சிங் உரிய வகையில் பதில் அளிக்கத் தவறிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
    நீதிமன்ற விசாரணையின் போது தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் குற்றம்சாட்டப்பட்ட புபீந்தர் சிங் போலா மறுத்தார். இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஞ்சு பஜாஜ் சந்த்னா அளித்த தீர்ப்பு:
    ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர் மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
    இதனால், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. எனினும், குற்றம்சாட்டப்பட்டவர் மேல் முறையீடு செய்யும் வகையில், ரூ.50 ஆயிரம் செலுத்தி தனிநபர் ஜாமீனில் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai