Enable Javscript for better performance
டிடிசி பேருந்து மோதி காயமடைந்தவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    டிடிசி பேருந்து மோதி காயமடைந்தவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

    By DIN  |   Published on : 08th October 2016 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி போக்குவரத்து நிறுவன (டிடிசி) பேருந்தில் அடிபட்டு காயமடைந்தவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுக் கோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது
    கடந்த 2012-ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த விபத்து குறித்த வழக்கு விவரம்:
    தில்லி துக்ளகாபாத் பகுதியைச் சேர்ந்தவர் சுதிர். இவர் டிடிசி பேருந்து சக்கரத்தில் அடிபட்டு பலத்த காயமடைந்தார். இதைத் தொடர்ந்து, பேருந்துக்கு இன்சூரன்ஸ் செய்த யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம், பேருந்து ஓட்டுநர், டிடிசி நிறுவனம் ஆகியோரிடம் இழப்பீடு பெற்றுத் தர உத்தரவிடக் கோரி தில்லியில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தில் சுதிர் வழக்குத் தொடுத்தார்.
    அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: 4.11.2012-இல் ஃபரீதாபாதில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்த டிடிசி பேருந்தில் ஏற முயன்றேன். நான் பேருந்தில் ஏறுவதற்குள் அதன் ஓட்டுநர் வாகனத்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கினார். இதனால், நான் நிலைதடுமாறி விழுந்தேன்.
    இதில், பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி எனது இடது கால் சேதமடைந்தது. சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். இந்த விபத்தில் எனது இடது கால் முற்றிலும் சேதமடைந்தது. இதனால், என்னால் பணிக்குச் செல்ல இயவில்லை. வருமானமும் முற்றிலும் தடைபட்டது. சாலை விதிகளை மீறி பேருந்தை ஓட்டுநர் ஓட்டியதுதான் இந்த விபத்துக்குக் காரணம். ஆகவே, பேருந்துக்கு காப்பீடு செய்த நிறுவனத்திடம் இருந்து உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அதில் கோரப்பட்டிருந்தது.
    வழக்கு விசாரணையின் போது, "வேண்டுமென்றே பொய் வழக்குப் புனையப்பட்டுள்ளது' என்று பேருந்து ஓட்டுநர், டிடிசி நிறுவனம் சார்பில் முறையிடப்பட்டது.
    இந்த வழக்கை விசாரித்த மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயத் தலைவர் மது ஜெயின் அளித்த தீர்ப்பு: சம்பவத்தன்று பேருந்தில் அடிபட்டு சுதிர் பலத்த காயமடைந்ததால், அவரது இடது கால் 72 சதவீதம் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவ அறிக்கைச் சான்றிதழ் மூலம் தெரிய வருகிறது. விபத்து ஏற்பட பேருந்து ஓட்டுநரின் கவனக் குறைவும், அஜாக்கிரதையும்தான் காரணம் என்பது தெளிவாகிறது. எனவே, விபத்தில் பலத்த காயமடைந்த சுதிருக்கு ரூ.10,33,900 இழப்பீட்டுத் தொகையை பேருந்துக்கு காப்பீடு செய்த நிறுவனம் வழங்க வேண்டும்' என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai