Enable Javscript for better performance
தனியார் ஆம்னி பேருந்துகளுக்கான நுழைவு வரி சட்ட நீக்கத்துக்கு எதிரான மனு தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    தனியார் ஆம்னி பேருந்துகளுக்கான நுழைவு வரி சட்ட நீக்கத்துக்கு எதிரான மனு தள்ளுபடி

    By DIN  |   Published on : 08th October 2016 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியார் ஆம்னி பேருந்துகளுக்கான நுழைவு வரி சட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது. இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
    தமிழகத்தில் மோட்டார் வாகன வரி விதிப்புச் சட்டத்தில் 2012-இல் மாநில அரசு திருத்தம் செய்து சட்டம் இயற்றியது. இதன்படி, தமிழ்நாட்டுக்கு வெளிமாநிலத்தில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள் உள்ளிட்ட சுற்றுலா அனுமதி பெற்ற வாகனங்களுக்கு "ஒரு இருக்கைக்கு இவ்வளவு வரி' என்ற வீதத்தில் தொகை நிர்ணயிக்கப்பட்டு நுழைவுக் கட்டணம் போல ஒவ்வொரு முறையும் வரி வசூலிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டது.
    இப்புதிய வரி விதிப்பு முறையால் பயணிகள், தனியார் பேருந்து சேவை வழங்கும் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம், புதுச்சேரி ஒப்பந்த வாகன உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்டவை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன.
    இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "இந்த விவகாரத்தில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் பழைய வரி முறையைப் பயன்படுத்தி மோசடி செய்வதாக தமிழக அரசு கூறுகிறது. ஆனால், மோசடியைத் தடுக்க கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வராமல் சட்டத் திருத்தம் செய்வது தவறு என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. அதனடிப்படையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் செல்லாது என அறிவிக்கிறோம்' என்று கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது.
    இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.
    தமிழக அரசு சார்பில் மாநில கூடுதல் தலைமை வழக்குரைஞர் சுப்ரமணிய பிரசாத்தும், எதிர் மனுதாரர்களான தனியார் ஆம்னி பேருந்து சங்கம் உள்ளிட்டவை சார்பில் வழக்குரைஞர்கள் சிதம்பரம், ஜி.வி.மோகன் ஆகியோரும் ஆஜராகி இரு தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
    இதைத் தொடர்ந்து, மனுவை பரிசீலித்த நீதிபதிகள், "இந்த விஷயத்தில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானது என கருதுகிறோம். எனவே, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று உத்தரவிட்டனர்.
    பிரச்னை என்ன?: மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி, தமிழகத்துக்குள் வெளிமாநிலங்களில் இருந்து வரும் தனியார் சுற்றுலா உரிமம் பெற்ற வாகனங்களுக்கு மூன்று பிரிவுகளாக நுழைவு வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு 7, 30, 90 ஆகிய நாள்களுக்கு தாற்காலிக நுழைவு வரி விதிக்கப்படும் என தமிழக அரசு கூறியது.
    உதாரணமாக, பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு வாரத்தில் ஏழு முறை வாகனம் வருவதாக இருந்தால் ஒவ்வொரு முறையும் அந்த வாகனத்துக்கு சுங்கச்சாவடி கட்டணம் போல நுழைவு வரி செலுத்தி அனுமதி பெறுவது கட்டாயமானது. இந்த வழக்கத்துக்கு வகை செய்யும் சட்டத் திருத்தத்தை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. அதை தற்போது உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai