Enable Javscript for better performance
தில்லி வக்ஃபு வாரியம் கலைப்பு: துணைநிலை ஆளுநர் அதிரடி: சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    தில்லி வக்ஃபு வாரியம் கலைப்பு: துணைநிலை ஆளுநர் அதிரடி : சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரைத்தார்

    By DIN  |   Published on : 08th October 2016 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி வக்ஃபு வாரியத்தை வெள்ளிக்கிழமை அதிரடியாக கலைத்த துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், அதில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரிக்க பரிந்துரைந்துள்ளார்.
    இது குறித்து துணைநிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு குறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தில்லி வக்ஃபு வாரியத்தை மாற்றியைமைக்க வருவாய்த் துறை 2015, அக்டோபர் 8-ஆம் தேதி ஆம் ஆத்மி அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் பெறப்படவில்லை. இதேபோல, வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியான மெஹபூப் ஆலம் நியமிக்கப்பட்ட நடவடிக்கைக்கும் உரிய ஒப்புதல் பெறப்படவில்லை. எனவே சட்டவிரோதமான இந்த நடவடிக்கை ரத்து செய்யப்படுகின்றது.
    மேலும், வக்ஃபு வாரியத் தலைவரான ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மேற்கொண்ட அனைத்து நியமனங்களும் ரத்து செய்யப்படுகிறது. 2011-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தில்லி வக்ஃபு வாரியத்தின் பதவிக் காலம் 2016-ஆம் ஆண்டு வரை உள்ளது. வாரியத்தின் 7 உறுப்பினர்களில் 5 பேர் ஏற்கெனவே ராஜிநாமா செய்துவிட்டனர். வாரியத்தை மாற்றிமைக்கும் தேவை எழவில்லை. எனவே, பதவிக் காலம் நிறைவடையும் வரை 99-ஆவது பிரிவு சட்டத்தின்படி வக்ஃபு வாரியத்தின் நிர்வாகம் அரசு வசம் எடுத்துக் கொள்ளப்படும்.
    வக்ஃபு சட்டம் 99(2)-ஆவது பிரிவின் கீழ், வாரியத்தின் அனைத்து அதிகாரங்களும் வருவாய்த் துறை செயலர் வசம் ஒப்படைக்கப்படுகிறது. புதிய வாரியம் அமைக்கப்படும் வரை இந்நடவடிக்கை அமலில் இருக்கும்.
    மேலும், தில்லி சுற்றுச்சூழல், வனத்துறை சிறப்புச் செயலரிடம் தில்லி வகஃப் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பு கூடுதலாக வழங்கப்படுகிறது.
    தில்லி வக்ஃபு வாரியத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள், ஊழல்கள், விதி மீறல்கள் உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளை சிபிஐ விசாரிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
    துணைநிலை ஆளுநரின் ஒப்புதலைப் பெறாமல் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்ட தில்லி வக்ஃபு வாரியம் எடுத்த முடிவுகள், நடவடிக்கைகள் சரியானதா என்பது குறித்து சட்ட ரீதியில் ஆராயக் குழு அமைக்குமாறும், அது தொடர்பான அறிக்கையை ஒரு மாதத்துக்குள் அளிக்கவும் கோட்ட வருவாய்த் துறை ஆணையர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாஜக வரவேற்பு
    தில்லி வக்ஃபு வாரியத்தை கலைத்து, துணைநிலை ஆளுநர் மேற்கொண்ட முடிவை தில்லி பாஜக வரவேற்றுள்ளது. இது குறித்து தில்லி பாஜகவின் சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் அதீஃப் ரஷீத் கூறுகையில், "கடந்த 15 ஆண்டு காலமாக தில்லி வக்ஃபு வாரியத்தின் சொத்துகள் தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பேசப்பட்டு வருகிறது. தில்லி வக்ஃபு வாரிய சொத்துகள் முறைகேடு குறித்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டால், 15 ஆண்டு கால விவகாரங்களையும் விசாரிக்க வேண்டும்' என்றார்.

    கேஜரிவால் சாடல்
    தில்லி வக்ஃபு வாரியத்தை கலைத்ததற்காக துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை முதல்வர் கேஜரிவால் சாடியுள்ளார். இதுதொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவுகளில், "வக்ஃபு வாரியம் கலைப்பு, மணீஷ் சிசோடியாவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை அழைப்பாணை, விவசாய நிலங்களுக்கான தில்லி அரசின் வழிகாட்டி மதிப்பு அறிவிக்கை ரத்து என தில்லி அரசின் செயல்பாடுகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்தும் வகையில் துணைநிலை ஆளுநர் செயல்படுகிறார். ஆம் ஆத்மி அரசு, மக்கள் நலப் பணிகளை சிறப்பாக செய்கிறது என்ற ஒரே காரணத்துக்காக இதுபோன்ற நடவடிக்கைகளை அவர் மேற்கொள்கிறார்' என்று தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai