Enable Javscript for better performance
ராணுவ தியாகத்தை அரசியலாக்க காங்கிரஸ் முயற்சி: தில்லி பாஜக குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    ராணுவ தியாகத்தை அரசியலாக்க காங்கிரஸ் முயற்சி: தில்லி பாஜக குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 08th October 2016 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராணுவ வீரர்களின் தியாகத்தைத் தொடர்ந்து அரசியலாக்க காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது என தில்லி பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
    இது குறித்து கட்சியின் தில்லி தலைவர் சதீஷ் உபாத்யாய் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் செய்தியாளர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் வெளியிட்டிருக்கும் கருத்து, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கூடியது. ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகத்தை அரசியல் லாபத்துக்காகவே காங்கிரஸ் தொடர்ந்து பயன்படுத்தியுள்ளது. ஜெனரல் சாம் மானெக்ஷா தலைமையில் நடைபெற்ற 1971-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட போரின் வெற்றியை தேர்தலில் பயன்படுத்தியது.
    தமிழகத்தில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில், இலங்கைக்கு 1987-ஆம் ஆண்டில் இந்திய அமைதிப் படையை அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு அனுப்பி வைத்தது. அதில் 1,200 வீரர்கள் உயிரிழந்தனர்.
    போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் காங்கிரஸ் கட்சி ஊழலில் ஈடுபட்டதை நாடே அறியும். நாட்டில் பொருளாதார ரீதியில் குற்றம் இழைப்பவர்களுக்கு ஆதரவாக கபில் சிபல் போன்றோர் ஆதரவாக உள்ளனர். மாட்டுத் தீவன ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட லாலு பிரசாத்துக்கு நீதிமன்றத்தில் வாதாடியவர் கபில் சிபல்.
    மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் நிர்பந்தத்தின் பேரிலும், அரசியல் நோக்கத்துடனும் அமித் ஷாவுக்கு எதிராக சிபிஐ மூலம் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை கபில் சிபல் நினைவில் கொள்ள வேண்டும். ராணுவ நடவடிக்கைகளை அரசியலாக்கி வரும் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவற்றின் தலைவர்களை நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
    இதுபோல அமித் ஷா குறித்து தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ள கருத்துகள் கண்டனத்துக்குரியவை. அரவிந்த் கேஜரிவால், அவரது அரசின் நேர்மை குறித்து நாட்டு மக்கள் அறிவார்கள். ஹவாலா பணம், பாலியல் புகார், மிரட்டிப் பணம் பறிப்பு ஆகிய புகார்களுக்கு ஆளான அமைச்சரவையைக் கொண்டிருந்தது என்றார் சதீஷ் உபாத்யாய்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai