Enable Javscript for better performance
காவிரி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்: புதிதாக பதவியேற்ற பாஜக எம்.பி. இல.கணேசன் பேட்டி- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்: புதிதாக பதவியேற்ற பாஜக எம்.பி. இல.கணேசன் பேட்டி

    By DIN  |   Published on : 15th October 2016 04:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "காவிரி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்' என்று புதிதாக மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.
    மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு அண்மையில் இல. கணேசன் தேர்வானார். இதேபோல, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த "மகாபாரதம்' சின்னத்திரை தொடர் புகழ் நடிகையும், பாஜக பிரமுகருமான ரூபா கங்குலி மாநிலங்களவை நியமன உறுப்பினராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார்.
    இதைத் தொடர்ந்து, இருவரின் பதவியேற்பு நிகழ்வு தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஹமீது அன்சாரி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இரு உறுப்பினர்களுக்கும் ஹமீது அன்சாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே. குரியன், மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பிரகாஷ் ஜாவடேகர், மத்திய இணையமைச்சர்கள் எஸ்.எஸ்.அலுவாலியா, முக்தார் அப்பாஸ் நக்வி, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    பின்னர் செய்தியாளர்களிடம் இல. கணேசன் கூறியதாவது: தமிழகத்தில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் நலன், மொழிக்காக குரல் கொடுக்க எனது வாழ்வில் முன்னுரிமை அளித்து வருகிறேன். காவிரிப் பிரச்னையில் தமிழகக் கட்சிகளுக்கு உள்ள அக்கறை, உணர்வை பாஜகவும் பிரதிபலித்து வருகிறது. காவிரிக்காக தமிழக அரசு முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாஜக துணை நிற்கிறது. மாநிலங்களவையில் பேச வாய்ப்புக் கிடைக்குமானால் காவிரி விவகாரத்தை நிச்சயமாக எழுப்புவேன்.
    ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய வனத் துறை அமைச்சராக இருந்த போது பிரகாஷ் ஜாவடேகர் முன்னெடுத்த முயற்சிகளை, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து மேற்கொள்வேன். அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் இல. கணேசன்.
    இதைத் தொடர்ந்து, பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்க நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம். இந்த விவகாரத்தை அரசியலாக்கும் வகையிலோ, ஆதாயம் தேடும் வகையிலோ பாஜக எக்காலத்திலும் ஈடுபடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தில் சட்டம்  கொண்டு வருவது தொடர்பான சட்ட விவகாரங்களை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
    காவிரி விவகாரத்தை கடந்த 20 நாள்களாக திமுக பேசி வருகிறது. அக்கட்சி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த முயற்சிப்பது, குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போலாகும். ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர், முக்தார் அப்பாஸ் நக்வி, எஸ்.எஸ். ஆலுவாலியா ஆகியோரிடம் பேசியுள்ளேன். விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என்றார் பொன் ராதாகிருஷ்ணன். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai