Enable Javscript for better performance
ஜீவனாம்ச தொகையை அதிகரிக்க கோரும் மனைவியின் மேல்முறையீடு மனு தள்ளுடி: தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    ஜீவனாம்ச தொகையை அதிகரிக்க கோரும் மனைவியின் மேல்முறையீடு மனு தள்ளுடி: தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 15th October 2016 04:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவாகரத்து கோரி கணவர் தொடுத்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்த ஜீவனாம்சத் தொகையை அதிகரித்து வழங்குமாறு மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    தில்லியைச் சேர்ந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கக் கோரி தில்லி நீதிமன்றத்தில் 2013-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தார். இதையடுத்து, தனது கணவர் தனக்கு ஜீவனாம்சமாக ரூ.1 லட்சம், நீதிமன்ற விசாரணைக்கு வந்து செல்வதற்கு பயணக் கட்டணம், தங்குவதற்கான செலவு ஆகியவற்றை அளிக்க உத்தரவிடக் கோரி மனைவி மனு தாக்கல் செய்திருந்தார்.
    இதற்கு பதில் மனு தாக்கல் செய்த கணவர், "நான் துபையில் உள்ள ஒரு கடையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறேன். எனக்கு சொற்ப வருமானமே கிடைத்து வருகிறது. இந்தியாவில் உள்ள எனது தாய் மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டு படுக்கையில் உள்ளார். அவரையும் அவ்வப்போது பார்த்துச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், எனக்கு அதிகச் செலவு ஏற்படுகிறது. மேலும், எனது மனைவி ஆயுர்வேத மருத்துவர். அவர் தனது தொழில் மூலம் மாதம்தோறும் ரூ.50 ஆயிரம் வருமானம் ஈட்டி வருகிறார்' எனத் தெரிவித்திருந்தார்.
    இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், விவாகரத்துக் கோரியுள்ள கணவர், அவரது மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.5 ஆயிரம், வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் வருவதற்கு ரூ.2 ஆயிரம், ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் வரும் போது பஞ்சப்படியாக ரூ.500 வழங்க வேண்டும் என்று 2014-ஆம் ஆண்டு நவம்பரில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் மனைவி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதில், கணவருக்கு எனக்கு ஜீவனாம்சம் வழங்குவதைத் தவிர வேறு எந்தப் பொறுப்பும் இல்லை. இதனால், ஜீவனாம்சத் தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிட வேண்டும் என முறையிட்டிருந்தார்.
    இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரதீப் நந்த்ரஜோக், பிரதீபா ராணி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் கணவர், மனைவியின் வருமானம் ஈட்டும் திறனைக் கருத்தில் கொண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கணவர் துபையில் வேலை செய்த போதிலும் வாழ்வதற்கான செலவு அந்நாட்டில் அதிகம் என்பதால் அவரது வருமானம் செலவுக்கே போதுமானதாக இருக்கும் என விசாரணையில் தெரிய வருகிறது. மேலும், ஒருவர் துபையில் வேலை செய்தால் அவர் அந்த நாட்டின் கரன்ஸியைத்தான் சம்பாதிக்கிறார். அதே கரன்ஸியைத்தான் செலவிடவும் செய்கிறார். இதனால், அவரது வருமானத்தை இந்திய கரன்ஸியில் மாற்றி ஜீவனாம்சத்தை உயர்த்துமாறு மனைவி கோர முடியாது. இதனால், ஜீவனாம்சத்தை உயர்த்தக் கோரும் மனைவியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai