Enable Javscript for better performance
தலாக் விவகாரத்தையும் பொது சிவில் சட்டத்தையும் தொடர்புபடுத்தக் கூடாது: மத்திய அரசு- Dinamani

சுடச்சுட

    

    தலாக் விவகாரத்தையும் பொது சிவில் சட்டத்தையும் தொடர்புபடுத்தக் கூடாது: மத்திய அரசு

    By DIN  |   Published on : 15th October 2016 04:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொது சிவில் சட்டம் குறித்து கருத்தறிவதற்கான சட்ட ஆணையத்தின் நடவடிக்கையை முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அரசியலாக்க முயலுவதாக மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. தலாக் விவகாரத்தையும் பொது சிவில் சட்டத்தையும் தொடர்புபடுத்தக் கூடாது என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.
    நாட்டில் உள்ள அனைத்து மதத்தினருக்கும் பொருந்தக் கூடிய பொது சிவில் சட்டம் குறித்து கருத்தறிவதற்காக சட்ட ஆணையம் தனது இணையதளத்தில் கேள்வித்தாள் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கையைப் புறக்கணிக்கப் போவதாக முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும், சில முஸ்லிம் அமைப்புகளும் தெரிவித்துள்ளன. தங்கள் மத உரிமைகள் மீது மோடி அரசு தொடுத்துள்ள போர் இது என்றும் அவை குற்றம்சாட்டின.
    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
    பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதத்தில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இணைய வேண்டும். இது தொடர்பாக அறிவுசார்ந்த விவாதம் நடக்கட்டும். அதில் உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். இந்த விவகாரத்தில் கருத்தொற்றுமை ஏற்படட்டும். மாறாக, இதில் பிரதமரின் பெயரை இழுத்து, அவரை சர்வாதிகாரி என்று ஏன் விமர்சிக்கிறீர்கள்?
    பொது சிவில் சட்டத்துடன் "தலாக்' எனப்படும் விவாகரத்து முறையை இணைத்து சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். மூன்று முறை தலாக் கூறப்பட்டு முஸ்லிம் பெண்கள் விவாகரத்து செய்யப்படும் நடைமுறை முடிவுக்கு வரவேண்டும் என்றே நாட்டு மக்கள் விரும்புகின்றனர். பெண்களுக்கு எதிராக எந்த மத நம்பிக்கையின் அடிப்படையிலும் எந்தவிதத்திலும் பாரபட்சம் காட்டப்படுவதை பெண்கள் விரும்பவில்லை.
    இந்த விவகாரமானது பாலின நீதி, பாரபட்சமின்மை, பெண்களின் கண்ணியம் ஆகியவை சம்பந்தப்பட்டதாகும்.
    இது தொடர்பாக முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அரசியல் கருத்துகளைக் கூறுவதில் ஆர்வமாக உள்ளது. அப்படியானால் நீங்கள் ஏதாவது ஓர் அரசியல் கட்சியில் சேர்ந்து விடலாமே! இந்த அமைப்பிடம் இருந்தும், முஸ்லிம் தலைவர்களிடம் இருந்தும் இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
    பொது சிவில் சட்டம் குறித்து கருத்து கூறுவதோடு நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அது குறித்து விவாதிப்பதற்கும், கருத்து கூறுவதற்குமான வாய்ப்பை சட்ட ஆணையம் அளித்துள்ளது. பொது சிவில் சட்டம் தொடர்பான விரிவான விவாதத்தை சட்ட ஆணையம் விரும்புகிறது. அதில் பங்கேற்க விரும்பாவிட்டால் அது முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் முடிவு. ஆனால் அதற்காக சிறுபான்மையினரின் காவலனாக அந்த அமைப்பு தன்னை காட்டிக் கொள்ளக் கூடாது. இதை ஓர் அரசியல் விவாதமாக முயற்சி மேற்கொள்ள வேண்டாம் என்றார் வெங்கய்ய நாயுடு.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai