ஆர்.எம்.எல். மருத்துவமனையில் புதிய பிரேத பரிசோதனை வளாகம்

தில்லி பாபா கரக் சிங் மார்கில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா (ஆர்.எம்.எல்.) மருத்துவமனையில் புதிய பிரேத பரிசோதனை வளாகம் திறக்கப்பட்டுள்ளது.
Published on
Updated on
1 min read

தில்லி பாபா கரக் சிங் மார்கில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா (ஆர்.எம்.எல்.) மருத்துவமனையில் புதிய பிரேத பரிசோதனை வளாகம் திறக்கப்பட்டுள்ளது.
ஆர்.எம்.எல். மருத்துவமனையில் 32 பிரேதங்களை பாதுகாக்கும் வகையிலான குளிர்பதனக் கூடம் மட்டுமே இருந்தது.
இதனால், மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக வரும் சடலங்கள் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரிக்கும், வேறு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டு வந்தன. இதனால், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
மேலும், சாலை விபத்தில் இறந்தவர்களின் சடலங்கள் இந்த மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அதிகளவில் கொண்டு வரப்படுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தடய அறிவியல் துறையின் கீழ் புதிதாக பிரேத பரிசோதனை வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டது.
பின்னர், நவீன கருவிகள் வசதியுடன் இந்த வளாகம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனைக் கூடத்திற்கு தேவையான தடயவியல் மருந்து நிபுணர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் பற்றாக்குறையின் காரணமாக இந்தக் கூடம் செயல்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது புதிய பிரேத பரிசோதனை வளாகத்தை சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநர் டாக்டர் ஜெகதீஷ் பிரசாத் திறந்து வைத்தார்.
இதுகுறித்து ஆர்.எம்.எல். மருத்துவமனையின் தடயவியல் மருந்து துறையின் தலைவர் (பொறுப்பு) டாக்டர் தேஜஸ்வி திப்பே ருத்ரப்பா கூறியது:
2008-ஆம் ஆண்டு வரை மருத்துவமனையாக மட்டுமே ஆர்.எம்.எல். செயல்பட்டு வந்தது. மருத்துவக் கல்வி நிறுவனமாக உருவான பிறகு, பிரேதப் பரிசோதனைக் கூட செயல்பாட்டை மேற்கொள்ள முயற்சி எடுக்கப்பட்டது.
ஒப்பந்த அடிப்படையில் பிணவறை தொழில்நுட்ப ஊழியர்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இருவர் உள்பட நான்கு பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இங்கு சட்டப்பூர்வ உடற்கூறுப் பரிசோதனை தவிர அடையாளம் தெரியாத சடலங்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயிற்சிக்காகவும், ஆராய்ச்சிப் பணிகளுக்காகவும் பயன்படுத்த முடியும்.
நாளொன்றுக்கு நான்கு முதல் ஐந்து உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ஆர்.எம்.எல். மருத்துவமனைக்கு எடுத்து வரப்படுகின்றன. இதுபோன்ற சூழலில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிரேதப் பரிசோதனை வளாகம் பயனுள்ளதாக இருக்கும் என்றார் தேஜஸ்வி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com