"எய்ம்ஸ்' எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனை (எய்ம்ஸ்) கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்புக்கான இணையதள
Updated on
1 min read

தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனை (எய்ம்ஸ்) கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்புக்கான இணையதள நுழைவுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
தில்லியில் இயங்கிவரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனை, தேசிய அளவில் புகழ்ப்பெற்ற மருத்துவமனையாகும். இங்குள்ள மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள நுழைவுத் தேர்வு மே 28-ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்ற இத்தேர்வில் சுமார் 2 லட்சத்து 84 ஆயிரத்து 737 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
இத்தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. தேர்வு எழுதியவர்களில் 4,905 பேர் தேர்ச்சி பெற்று எய்ம்ஸில் நடைபெற உள்ள கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 1,828 மாணவிகள், 2,077 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.  
நுழைவுத் தேர்வு முடிவுகள் எய்ம்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் (ஹண்ண்ம்ள்ங்ஷ்ஹம்ள்.ர்ழ்ஞ்) அதன் இதர ஆறு கிளைகளின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து எய்ம்ஸ் தேர்வுகள் துறைத் தலைவர் டாக்டர் அசோக் குமார் ஜர்யால் கூறுகையில், "புது தில்லி எய்ம்ஸ் வரலாற்றில் முதல் முறையாக நிகழ் கல்வியாண்டில் 100 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்' என்றார்.
இதனிடையே, மே 31-ஆம் டாக்டர் ஆனந்த் ராய் என்பவர் இந்த நுழைவுத் தேர்வின் வினாத்தாள்கள் கசிந்துவிட்டதாக புகார் தெரிவித்தார். இது தொடர்பான தனது சுட்டுரையில் (டுவிட்டர்) "உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் உள்ள ஒரு மையத்தில் இருந்து வினாத்தாள் கசிந்துள்ளது. இது தொடர்பாக பிரதமரும், எய்ம்ஸ் இயக்குநரும் சிபிஐ  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். ஏற்கெனவே இவர், மத்திய பிரதேசத்தின் மாநில அரசு பணியிடங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு நடத்தும் "வியாபம்' அமைப்பில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தையும் அம்பலப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் ஆனந்த் ராயின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக எய்ம்ஸ் நிர்வாகம் அமைத்த குழு, தனது விசாரணை அறிக்கையை அளித்தது. அதில், உத்தரப் பிரதேசத்தில் ஒரு மையத்தில் தேர்வெழுதிய சில மாணவர்கள் சில அதிகாரிகளுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட போதிலும், வினாத்தாள் ஏதும் கசியவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் புகாரை மறுத்த எய்ம்ஸ் நிர்வாகம், தேர்வு முடிவுகள் முறைப்படி அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது. அதன்படி, வியாழக்கிழமை இத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com