மேடை விருந்தினர்களின் பட்டியலில் ஸ்ரீதரன் பெயரை சேர்க்க பிரதமர் அலுவலகம் அனுமதி: கொச்சி மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா விவகாரம்

கொச்சி மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவுக்கான மேடையில் அமரும் விருந்தினர்கள் பட்டியலில், தில்லி மெட்ரோ ரயில் சேவை ஆலோசகர்
Updated on
1 min read

கொச்சி மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவுக்கான மேடையில் அமரும் விருந்தினர்கள் பட்டியலில், தில்லி மெட்ரோ ரயில் சேவை ஆலோசகர் இ. ஸ்ரீதரனின் பெயரை சேர்க்க பிரதமர் அலுவலகம் வியாழக்கிழமை ஒப்புதல் தெரிவித்தது.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் ஸ்ரீதரனை அவமதிக்கும் வகையில் பிரதமர் அலுவலகம் செயல்பட்டதாக கேரளத்தில் பரவலாக எழுந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
இந்திய மெட்ரோ ரயில் சேவையின் தந்தையாகப் போற்றப்படும் இ.ஸ்ரீதரன் தில்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான ஆலோசகராக உள்ளார். இவரது சேவையை அங்கீகரிக்கும் வகையில் "பத்மஸ்ரீ' விருது 2001-ஆம் ஆண்டிலும், "பத்ம விபூஷண்' விருது 2008-ஆம் ஆண்டிலும் மத்திய அரசு வழங்கியது.
இந்நிலையில், மெட்ரோ நகரங்களைத் தொடர்ந்து கேரள மாநிலம் கொச்சியில் 25 கி.மீ. தூரம் கொண்ட மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா சனிக்கிழமை (ஜூன் 17) நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த ரயில் சேவை தொடக்க நிகழ்வில் மேடையில் அமரும் சிறப்பு விருந்தினர்கள் பட்டியலை பிரதமர் அலுவலக அனுமதிக்காக கேரள அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பட்டியலில் இருந்த ஸ்ரீதரன், கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனத் தலைவர் இலியாஸ் ஜார்ஜ் ஆகியோரின் பெயர்களை பிரதமர் அலுவலகம் நீக்கியது.
இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் ஸ்ரீதரனை அவமதித்து விட்டதாக சுட்டுரை (டுவிட்டர்), முகநூல் (ஃபேஸ்புக்) உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வலைதள வாசகர்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயனும் தமது சுட்டுரை பக்கத்தில், ஸ்ரீதரன் பெயரை திறப்பு விழாவின் மேடை விருந்தினர்கள் பட்டியலில் பிரதமர் அலுவலகம் சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரம் கேரள மாநிலத்தில் சர்ச்சை ஏற்படுத்தி மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு தலைவலியை கொடுத்தது.
இதைக் கவனத்தில் கொண்டு, கேரள அரசுக்கு பிரதமர் அலுவலகம் வியாழக்கிழமை அனுப்பிய கடிதத்தில் "கொச்சி மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவில் ஸ்ரீதரன், கேரள மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோரின் பெயரைச் சேர்க்கலாம்' என்று கூறியது. அதே சமயம், கேரள முதல்வர் அலுவலகத்தின் சார்பில் "பி.தாமஸ் எம்எல்ஏ' பெயரை சேர்க்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பிரதமர் அலுவலகம் ஏற்கவில்லை.
முன்னதாக, மேடை விருந்தினர்கள் அமரும் பகுதியில் தமது பெயர் சேர்க்கப்படாததற்கு இ.ஸ்ரீதரன் கூறுகையில், "இந்த விஷயத்தை யாரும் சர்ச்சையாக்க வேண்டாம். பிரதமரின் பாதுகாப்பு கருதி சில கட்டுப்பாடுகளை அதிகாரிகள் விதித்திருக்கலாம். இதனால், எனக்கு எந்தவித வருத்தமும் கிடையாது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com