ஆசிரியர்களை கெளரவிக்காத எந்தவொரு தேசமும் முன்னேற்றம் காணாது என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
ஆசிரியர் தினத்தையொட்டி தில்லி அரசின் சார்பில் தியாகராஜா விளையாட்டு அரங்கில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தில்லி அரசு, தனியார் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றிய 91 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வழங்கினார். ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விருதில் ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலை, தகுதியுரை, பதக்கம், சால்வை ஆகியன அடங்கும்.
விழாவில் கேஜரிவால் பேசுகையில், "கடந்த இரண்டரை ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சியில் ஆசிரியர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கி வருகிறோம். தில்லி அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் முக்கியப் பணிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற ஆசிரியர்களை மதிக்காத, கெளரவிக்காத எந்தவொரு தேசத்தின் முன்னேற்றமும் சாத்தியமில்லை' என்றார்.
துணை முதல்வரும், கல்வித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா பேசுகையில், "கல்வித் துறையில் தில்லி அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தத் திட்டங்களிலும், தேச கட்டுமானத்திலும் ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பரியது' என்றார்.
துக்ளாகாபாதில் விஷ வாயு பாதிப்பிலிருந்து பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றியதற்காக, துக்ளகாபாத் அரசுப் பள்ளி முதல்வர் மணிஷாவுக்கும், சமூக அறிவியல் பாடத்தை வித்தியாசமான முறையில் கற்பித்து வரும் ராமகிருஷ்ணாபுரம் சர்வோதயா பள்ளி ஆசிரியர் முராரி ஜாவுக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பரிந்துரையின் பேரில் இரு சிறப்பு விருதுகள் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.