இந்தியாவில் கடந்த ஆண்டு நேரிட்ட சாலை விபத்துகளில் ஒரு மணி நேரத்துக்கு சராசரியாக 17 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு நேர்ந்த சாலை விபத்துகள் குறித்த அறிக்கையை, மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி புதன்கிழமை வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு நேரிட்ட சாலை விபத்துகளின் மொத்த எண்ணிக்கை 4,80,652 ஆகும். இந்த விபத்துகளில் மொத்தம் 1,50,785 பேர் உயிரிழந்தனர்.
அதாவது, ஒரு மணி நேரத்துக்கு சராசரியாக 55 விபத்துகளும், 17 உயிரிழப்புகளும் நேரிட்டுள்ளன. ஒரு நாளைக் கணக்கிட்டால், 400-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. முந்தைய ஆண்டை காட்டிலும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 4.1 சதவீதம் குறைந்துள்ள போதிலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு விபத்துகளில் படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,94,624 ஆகும்.
உயிரிழந்தோரில் சுமார் பாதி பேர் அதாவது 46.3 சதவீதம் பேர் இளம் வயதினர் (18-35) ஆவர். 83 சதவீதம் பேர், பணியாற்றும் வயதுள்ளவர்கள் (18-60). 84 சதவீத சாலை விபத்துகளுக்கு, ஓட்டுநர்களே முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.
தமிழகம், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், குஜராத், தெலங்கானா, சத்தீஷ்கர், மேற்கு வங்கம், ஹரியாணா, கேரளம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகிய 13 மாநிலங்களில்தான், 86 சதவீத சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மொத்த விபத்துகள் 4,80,652
உயிரிழந்தோர் 1,50,785
படுகாயமடைந்தோர் 4,94,624
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.