கெளரி லங்கேஷ் கொலை: தமிழக கம்யூனிஸ்ட் எம்பிக்கள் கடும் கண்டனம்

கர்நாடக மாநிலம்,  பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு
Published on
Updated on
1 min read

கர்நாடக மாநிலம்,  பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த,  மாநிலங்களவை கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்களான டி.ராஜா,  ஆர். ரங்கராஜன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட்: இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலரும்,  அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா கூறியதாவது:  
பத்திரிகையாளர் கௌரி சங்கரின் படுகொலை வன்மையான கண்டனத்திற்கு உரியது.  அவர் இந்தியா அளவில் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளராகவும்,  பத்திரிகையாளராகவும் திகழ்ந்தவர்.  அவரது கொலைச் சம்பவம் குறித்து உயர் நிலை அளவில் விசாரணை நடத்தி குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
அதேவேளையில்,  இந்த கொலைச் சம்பவத்தில்  ஒரு விதமான சதி வலையும் உள்ளது.  அதாவது,  அரசுக்கு எதிராகவும், தற்போதைய சமூகக் கட்டுமானத்திற்கு எதிராகவும் குரல் கொடுக்கிற நபர்களை தனிப்பட்ட முறையில் ஒழித்துக் கட்டுவது, படுகொலை செய்வது உள்ளிட்ட போக்கு நிலவுகிறது. இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்.
மேலும், இது குடிமக்களின் அரசியல் சட்ட உரிமைகளுக்கும்,  மக்களுடைய  சுதந்திரங்களுக்கும் எதிரான  தாக்குதலாகும்.  இதை எதிர்த்து கடுமையாகப் போராட வேண்டியுள்ளதால்,  எல்லா மதச்சார்ப்பற்ற ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும்.  பத்திரிகையாளர்கள் மீது இதுபோன்ற தாக்குதல் நிகழ்த்தப்படுவது கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.  பத்திரிகையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வேளையில்,  அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டியது அவசியமாகும்.  மத நம்பிக்கை மீதான பெயரில் வன்முறை கூடாது என பிரதமர் மோடி கூறி வருகிறார்.  ஆனால்,  தற்போது நடைபெறும் சம்பவங்கள் சகிப்புத்தன்மை இன்மையைக் காட்டுவதாக உள்ளது.  பன்முகத் தன்மைக்கு எதிராக தாக்குதல் தொடர்வதால் இதுகுறித்து பிரதமர் பதில் கூற வேண்டும் என்றார் டி.ராஜா.
மார்க்சிஸ்ட்: தமிழகத்தைச் சேர்ந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சித் தலைவர்களில் ஒருவரும்,  அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் கூறியதாவது:
கர்நாடகத்தில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது இது மூன்றாவது நிகழ்வாகும்.  இது பத்திரிகையின் உரிமையை,  ஜனநாயக உரிமையைப் பறிப்பது மட்டுமல்ல.  பேச்சுரிமை,  எழுத்துரிமையைப் பறிப்பதுமாகும்.
இந்திராகாந்தி காலத்தில் கொண்டு வரப்பட்டது அறிவிக்கப்பட்ட "எமர்ஜென்ஸி'.  ஆனால்,  தற்போது ஒரு புதுவிதமான எமர்ஜென்ஸி எனும் கறுப்பு ஆட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  
அதாவது, என்ன சாப்பிடுவது, என்ன சாப்பிடக் கூடாது எனத் தீர்மானிப்பது எல்லாம் அதிலிருந்து வருவதுதான்.  அதை ஒட்டியே பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் படுகொலையும் அமைந்துள்ளது.
அவர்  சமூகக் கட்டுமானத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும் எதிராக தனது கருத்தைக் கூறுவதில் சமரசம் செய்துகொள்ளாதவர்.
நேர்மையான பத்திரிகையாளர்.   அவரது கருத்துக்கு எதிர்க் கருத்து இருப்பவர்கள், அதை பத்திரிகையின் மூலம் வெளிப்படுத்தும் சுதந்திரம் உள்ளது.  
அதுபோன்று கருத்தை வெளிப்படுத்தாமல் கொலை செய்வது என்பது பத்திரிகை தொழிலுக்கு வருவோரை ஊக்கமிழக்கச் செய்வதாக அமைந்துவிடும்.  எனவே,  இவற்றைத்
தடுக்கும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com