நரேலா - பவானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தில் குப்பைகளை அதிகளவில் கையாளுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் ப்ரீத்தி அகர்வால் உத்தரவிட்டார்.
தில்லி காஜிப்பூரில் குப்பைக் கிடங்கு சரிந்து விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இத்தகைய நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகங்கள் முனைப்புக் காட்டத் தொடங்கியுள்ளன.
கிழக்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட காஜிப்பூர் குப்பைக் கிடங்கு மேடு, அண்மையில் பெய்த மழையின்போது திடீரென சரிந்து விழுந்தது. அப்போது, அவ்வழியாக சென்ற வாகனங்கள் குப்பையில் சிக்கி அப்பகுதி கால்வாயில் மூழ்கின. இதில் பெண் உள்பட 2 பேர் பலியாகினர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, காஜிப்பூர் குப்பைக் கிடங்கில் குப்பைகளைக் கொட்டுவதற்கு தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் தடை விதித்தார். மேலும், அங்கு கொண்டு வரப்படும் குப்பைகளை தில்லியின் எல்லைப் புறப் பகுதியில் உள்ள ராணிகேராவில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட காஜிப்பூர் குப்பைக் கிடங்கின் உயரம் இருந்ததால் தான் கிடங்கின் ஒரு பகுதி சரிந்து விழக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால், தில்லியின் மூன்று மாநகராட்சிகளும் குப்பைக் கிடங்கின் உயரம் அதிகரிக்காமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வடக்கு தில்லி மாநகராட்சியின் மேயர் ப்ரீத்தி அகர்வால் அந்த மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் நரேலா - பவானா கழிவு- எரிசக்தி நிலையத்திற்கு புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது, அதிகபட்ச அளவிலான குப்பைகளை எரிசக்தி நிலையத்தில் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார். அப்போதுதான், அப்பகுதியானது அதிக அளவில் குப்பைகள் கொட்டும் இடமாக மாறாது என்றும் அதிகாரிகளிடம் கூறினார்.
இந்தக் கழிவு- எரிசக்தி நிலையத்தில் 1,200 டன் குப்பைகள் பயன்படுத்தப்பட்டு 12 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குப்பைகளின் பயன்பாட்டை அதிகரித்து மின்சார உற்பத்தியைப் பெருக்குமாறுஅதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டுள்ளார்.
அந்தக் கழிவு-எரிசக்தி நிலையம் செயல்படும் விதம் குறித்து மேயரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். அப்போது, போக்குவரத்து செலவினத்தைக் குறைக்கும் வகையில், நரேலா மண்டலத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை நேரடியாக எரிசக்தி நிலையத்தில் கொட்டுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார். மேலும், திறன்மிக்க கழிவு மேலாண்மைக்கு உதவும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் கழிவுகளைப் பிரித்தெடுத்து வழங்குவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு மேயர் ப்ரீத்தி அகர்வால் உத்தரவிட்டார்.
மதிய உணவு மையத்தில் ஆய்வு: இதைத் தொடர்ந்து, ரோஹிணி மண்டலத்தில் உள்ள மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 32 ஆயிரம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் புத் விஹாரில் மைத்ரி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பவுண்டேஷனின் மதிய உணவு சமையல் கூடத்திற்கு மேயர் சென்று ஆய்வு செய்தார். அங்குள்ளஅறையில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்களின் தரம், உணவு தயாரிக்கப்படும் முறை ஆகியவற்றையும் அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் இது குறித்து மேயர் கூறுகையில், "காஜிப்பூர் குப்பைக் கிடங்கு சம்பவத்தில் இருந்து மாநகராட்சி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தில்லியை குப்பைக் கிடங்கு இல்லாத நகரமாக உருவாக்கப் பாடுபாட வேண்டும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.