மாணவி அனிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்கிடம் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி நேரில் மனு

மாணவி அனிதாவின் மரணம் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மத்திய உள்துறை அமைச்சர்
Published on

மாணவி அனிதாவின் மரணம் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர்- தலைவர் மருத்துவர் கே. கிருஷ்ணசாமி நேரில் மனு அளித்து வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புது தில்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை புதன்கிழமை மாலை கே.கிருஷ்ணசாமி நேரில் சந்தித்து மனு அளித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
செப்டம்பர் 1-ஆம் தேதி மாணவி அனிதா திடீரென மரணமடைந்தார்.  அவரது மரணத்தில் பல்வேறு விதமான சந்தேக அம்சங்கள் உள்ளன. இதுகுறித்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வரைச் சந்தித்து மனு அளித்தேன். இந்த விவகாரத்தில் பல்வேறு விதமான அரசியல் சூழ்ந்துள்ளது.  
அனிதாவின் மரணத்தை வைத்து  தேசியத்திற்கு எதிராக அரசியல் செய்யும் போக்கு உருவாகி வருகிது. இதனால்,  அனிதாவின் மரணம் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளேன்.
"இது தொடர்பாக தமிழக அரசிடமிருந்து வேண்டுகோள் வரும் பட்சத்தில் நிச்சயமாக இக்கோரிக்கை குறித்து ஆவன செய்யப்படும்' என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.  எனவே, தமிழகலத்தில் கடந்த 1-ஆம் தேதியில் இருந்து ஏழு தினங்களாக நடந்து வரும் அனைத்து விதமான சூழ்நிலைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு அனிதாவின் மரணத்தில் பின்னணியில் உள்ள அம்சங்களை நாட்டு மக்களுக்கு மாநில அரசு தெரியப்படுத்த வேண்டும்.
ஏனெனில்,  மாணவி அனிதா 12-ஆம் வகுப்பில்  1,176 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.  அதேவேளையில்,  "நீட்' தேர்வை  மே மாதம் எழுதி அதில்  86.50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.  
இதனால்   "நீட்' தேர்வு குறித்து அவருக்கு தெரியாது என்று சொல்வதற்கு எந்தவிதத்திலும் வழியில்லை.
மேலும்,  அரசு ஒரு முடிவு எடுக்கும் போது அதன் வழியில்தான் செல்ல வேண்டும்.  அந்த இளம் பள்ளி மாணவியை திசைதிருப்பும் வகையில் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி,  அவரை அரசியல் லாபங்களுக்காக மாநில அரசுக்கு எதிராகவும்,  இந்திய தேசத்திற்கு எதிராகவும் செயல்படுவதற்கு ஒரு கும்பல் திட்டமிட்டது.  ஜனவரி மாதத்திலும்  ஜல்லிக்கட்டு விவகாரத்தின் போது இதேபோன்று தமிழக அரசுக்கும்,  மத்திய அரசுக்கும் எதிராக ஒரு கும்பல்  செயல்பட்டது.
தற்போதும் அதேபோன்று ஒரு தேசவிரோத கும்பல் அனிதாவின் மரண பிரச்னையை  அவர்களது போக்கில் கொண்டு செல்கின்றனர்.  எளிய குடும்பத்தைச் சேர்ந்த அனிதாவின் மரணத்தில் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மத்திய உள்துறை அமைச்சரிடம் சிபிஐ விசாரணை கோரி மனு அளித்துள்ளோம்.
பொதுவாக தமிழகத்தின் கல்வித் தரம் அண்மைக் காலமாக குறைந்துள்ளது. எந்த விதமான போட்டித் தேர்வுகளையும் சந்திக்கும் வகையில் மாணவர்களுக்கு திறன் இல்லாமல் போய்விட்டது.
குறைந்தபட்சம் நீட் தேர்வை அடிப்படையாக வைத்தாவது தமிழகத்தில் கல்வித்  திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கில்தான் "நீட்' தேர்வை ஆதரிக்கிறேன்  என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com