காஷ்மீரில் கல்வீச்சில் ஈடுபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.
காஷ்மீரில் பாதுகாப்புத் துறையினருக்கு எதிராக சமூகவலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பி இளைஞர்களைத் திரட்டியது, கல்வீச்சில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த கம்ரான் யூசுப், குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவித் அகமது பட் ஆகியோர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென்று என்ஐஏ சார்பில் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர்களிடம் விசாரிப்பதன் மூலம் கல்வீச்சில் ஈடுபடும் பிற கும்பல்கள் குறித்த விவரத்தையும், அவர்களை யார் தூண்டி விடுகிறார்கள் என்ற தகவலையும் பெற முடியும் என்று அந்த மனுவில் என்ஐஏ கூறியிருந்தது.
இதுதவிர யூசுப் தனிப்பட்ட முறையில் புகைப்படங்களை எடுத்து பத்திரிகைகளுக்கு விற்பனை செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், அவர் வேண்டுமென்றே இளைஞர்களைத் திரட்டி புகைப்படம் எடுப்பதுடன், அதனை உள்ளூர் மற்றும் தேசியப் பத்திரிகைகளுக்கு கொடுத்து பணம் பெற்று வந்துள்ளார். இது தொடர்பாக அவரை போலீஸார் ஏற்கெனவே எச்சரித்திருந்தனர்.
அண்மையில் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டி அளித்த குற்றச்சாட்டில் 7 பேரை என்ஐஏ கைது செய்தது. இதனால், அங்கு தொடர்ந்து கல்வீச்சு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் நீடித்து வருகின்றன.
நிதியை ஆதாரமாகக் கொண்டுதான் காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. பிரிவினைவாத இயக்கத்தினர் பெரும்பாலும் பணம் கொடுத்துதான் இளைஞர்களை கல்வீச்சில் ஈடுபடச் செய்கின்றனர். எனவே, பயங்கரவாதத்துக்கு நிதி செல்வதை முற்றிலுமாக முடக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.