பிரதமர் அலுவலகத்தின் உயரதிகாரி எனக் கூறி ஏமாற்ற முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து குருகிராம் காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ரவீந்தர் குமார் கூறியதாவது:
குருகிராம் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள கோட்ட ஆணையர் அலுவலகத்திற்கு சம்பவத்தன்று ஒருவர் மிடுக்கான உடையில் வந்தார். தான் பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச் செயலர் அதிகாரியாக பணிபுரிவதாக கூறிக் கொண்டு கோட்ட ஆணையரை ஒரு காரியத்திற்காக அணுகினார். அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், உடனடியாக பிரதமர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு அவர் குறித்து விசாரித்தனர். அப்போது, வந்தவர் அதுபோன்று முதன்மைச் செயலர் பதவியில் இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, கோட்ட ஆணைய அலுவலகத்தின் பாதுகாவலர்கள் அந்த நபரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் அமெரிக்க வாழ் இந்தியர் அதுல் கல்ஸி என்பது தெரிய வந்தது. அவரிடம் குருகிராம் முகவரியில் வாக்காளர் அடையாள அட்டையும் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, குருகிராம் குடிமையியல் நீதிமன்றத்தில் அதுல் கல்ஸி ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் ரவீந்தர் குமார். இச்சம்பவம் குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கோட்ட ஆணையர் டி.சுரேஷ் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.