சீலிங் நடவடிக்கை விவகாரம்: உடனடி தீர்வு காண அனில் பய்ஜால் உறுதி: முதல்வர் கேஜரிவால் தகவல்

தில்லி சீலிங் பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் உறுதி அளித்ததாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

தில்லி சீலிங் பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் உறுதி அளித்ததாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
சீலிங் நடவடிக்கை விவகாரம் தொடர்பாக தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை மாலை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் கேஜரிவால் பின்னர் கூறியதாவது: துணைநிலை ஆளுநரிடம் சீலிங் நடவடிக்கையை உடனடியாக தடுக்க வலியுறுத்தினேன். இது தொடர்பாக மத்திய அரசுடன் அவர் பேசியிருப்பதாகவும், விரைவில் இவ்விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர்உறுதி அளித்தார்.
சீலிங் நடவடிக்கைக்கு தடை கேட்டு தில்லி அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனு தயாராகி வருகிறது. ஓரிரு நாள்களில் இம்மனு தாக்கல் செய்யப்படும். தற்போதுவரை சீலிங் நடவடிக்கை தொடர்கிறது. சீலிங் நடவடிக்கைக்கு உள்படுத்தப்பட்ட சந்தைகளை செவ்வாய்க்கிழமை மாலை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட வணிகர்களை சந்தித்தேன். எவ்வித ஆவணமும், உத்தரவும் இல்லாமல் சீலிங் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக புகார் தெரிவித்தனர். இது தொடர்பாகவும் துணைநிலை ஆளுநரிடம் விவாதித்தேன். இந்த விவகாரத்துக்கு தீர்வு காணவிட்டால் வணிகர்கள் நடத்தும் கடையடைப்புக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளிக்கும்' என்றார்.

தில்லி மாஸ்டர் பிளானில் திருத்தம்
இதுகுறித்து மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
தில்லி மாஸ்டர் பிளானில் உள்ள குறைகளை களையும் வகையில் அதில் திருத்தம் செய்யப்படவுள்ளது. 
குறைகள் குறித்து தெரிவிக்குமாறு தில்லி அரசிடம் கேட்டுள்ளோம். குறிப்பாக, கடை மற்றும் குடியிருப்புகளாக உள்ளவற்றிலும், வணிக வளாகங்கள், வணிகம் சார்ந்த தெருக்கள், வணிக மையங்கள், உள்ளூர் சந்தைகள் ஆகியவற்றில் அனைத்திலும் ஒரே மாதிரியான ப்ளோர் ஏரியா ரேஷியோ இருக்கும் பரிந்துரையை அளிக்க உள்ளோம். வணிகம் சார்ந்த தெருக்களில் உள்ள தரைதளங்களிலும் வணிகம்சார் நடவடிக்கைகளை தடையில்லாமல் மேற்கொள்ள தேவையான கட்டணத்தை வசூலிப்பதில் எவ்வித பாகுபாடும் காட்டாமல் இருத்தல், குடியிருப்புப் பகுதிகளை வணிகத்துக்காக பயன்படுத்தும் உரிமையாளர்களுக்கு விதிக்கப்டும் அபராதத்தை குறைத்தல் போன்ற பரிந்துரைகளை அளிக்கவுள்ளோம் என்றார். 

சட்டப்படி தீர்வு 
இந்தச் சந்திப்பு குறித்து துணைநிலை ஆளுநர் தனது சுட்டுரையில், "தற்போதுள்ள சீலிங் நடவடிக்கை விவகாரம் தொடர்பாக முதல்வர் கேஜரிவால் என்னை சந்தித்தார். இந்த விவகாரத்துக்கு சட்டத்துக்கு உள்பட்டு தீர்வு காண அனைத்து வழிமுறைகளும் ஆராயப்பட்டு வருவது குறித்து அவரிடம் தெரிவித்தேன். இவ்விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காணப்படும்' எனத் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com