Enable Javscript for better performance
சிறுவன் கடத்தல் வழக்கு: 4 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    சிறுவன் கடத்தல் வழக்கு: 4 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

    By DIN  |   Published on : 09th February 2018 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2010-ஆம் ஆண்டில் ரூ.25 லட்சம் பணம் கேட்டு 7 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை தில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது.
    வடமேற்கு தில்லியைச் சேர்ந்தவரின் 7 வயது சிறுவன் தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, நான்கு பேர் ஆட்டோ ரிக்ஷாவில் அச்சிறுவனைக் கடத்திச் சென்றனர். இச்சம்பவம் 2010, டிசம்பர் 11-ஆம் தேதி நடந்தது.
    இச்சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோருக்கு சக சிறுவர்கள் தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர் சரஸ்வதி விஹார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே, சிறுவனைக் கடத்திச் சென்ற மர்ம நபர்களிடமிருந்து பெற்றோருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்கள், சிறுவனை உயிருடன் விடுவதற்கு ரூ.25 லட்சம் பணம் தருமாறு கேட்டனர். மேலும், இது தொடர்பாக போலீஸாரிடம் தகவல் தெரிவித்தால், சிறுவனைக் கொன்று விடுவதாகவும் மிரட்டினர். இதைத் தொடர்ந்து, சிறுவனின் தந்தையை உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூர் பகுதிக்கு பணத்துடன் வருமாறும் கூறினர்.
    இந்நிலையில், அங்கு வைத்து சிறுவனை போலீஸார் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக புன்ட்டி, பிரிஜேஷ், கமல் சாக்úஸனா, ரவீந்தர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிமன்றத்தில் ஆஜரான நால்வரும் தாங்கள் குற்றத்தில் ஏதும் ஈடுபடவில்லை என்றும், போலீஸார் பொய் வழக்குப் பதிந்துள்ளதாகவும் முறையிட்டனர்.
    இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு குற்றம்சாட்டப்பட்ட நால்வரின் குற்றத்தை உறுதி செய்து ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் நால்வரும் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் விபின் சாங்கி, பி.எஸ். தேஜி ஆகியோர் அடங்கிய அமர்வு நால்வரின் தண்டனையையும் உறுதி செய்து உத்தரவிட்டது. இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கும் எதிராக விசாரணை நீதிமன்றம் அளித்த ஆயுள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. சிறுவனைக் கடத்திய சம்பவத்தில் நால்வருக்கும் உள்ள தொடர்பு அரசுத் தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் அவர்கள் நால்வரின்அடையாளமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
    சிறுவனின் வாக்குமூலம், சிறுவனின் நண்பர்களின் வாக்குமூலம், தந்தை, போலீஸ் அதிகாரிகளின் வாக்குமூலம் ஆகியவையும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்தக் கடத்தல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டிந்ததை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது. உறுதியான ஆதாரங்கள், சாட்சியங்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நால்வருக்கும் விசாரணை நீதிமன்றம் தண்டனை அளித்திருப்பதாகக் கருதுகிறோம். இதனால், அத் தீர்ப்பில் தலையிடுவதற்கான எவ்வித அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai