Enable Javscript for better performance
பொது இடங்கள் பராமரிப்பில் முன்மாதிரியாகத் திகழும் எஸ்டிஎம்சி! துணைநிலை ஆளுநர் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    பொது இடங்கள் பராமரிப்பில் முன்மாதிரியாகத் திகழும் எஸ்டிஎம்சி! துணைநிலை ஆளுநர் பாராட்டு

    By DIN  |   Published on : 01st January 2018 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொது இடங்களைப் பராமரிப்பதில், தில்லியில் உள்ள ஏனைய மாநகராட்சிகளுக்கு,  தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) முன்னுதாரணமாகத்  திகழ்ந்து வருவதாக தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் பெருமிதத்துடன் குறிப்பிட்
    டார்.
    தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட  பகுதிகளில் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது கல்காஜி, நேரு பிளேஸ் மேம்பாலங்களுக்கு கீழுள்ள அழகுபடுத்தப்பட்ட  பொது இடங்களை மக்களின் பயன்பாட்டுக்காக  திறந்துவைத்தார். 
    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட  பகுதிகளில் பல மேம்பாலங்கள் உள்ளன. இந்த  மேம்பாலங்களுக்கு கீழுள்ள பகுதிகளை சமூக விரோதக் கும்பல்கள் ஆக்கிரமித்து தங்களின் சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தி வந்தன. இதனால், தில்லியின் நற்பெயருக்கு பாதகம் ஏற்பட்டதுடன் பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியானது.  
    இதுபோன்ற 12 மேம்பாலங்களை தெற்கு மாநகராட்சி அடையாளம் கண்டு அந்த மேம்பாலங்களுக்கு கீழுள்ள இடங்களை ரூ. 7 கோடி 82 லட்சம் செலவில் புனரமைத்தது. இந்த அழகுபடுத்தும் பணிகள் 9 மாதங்களில் மேற்கொள்ளப்பட்டன.  
    கல்காஜி மேம்பாலத்துக்கு கீழ் 160 மீட்டர் நீளமும் 50 மீட்டர் அகலமும் உடைய பகுதி  ரூ.50 லட்சம் செலவிலும், நேரு மேம்பாலத்துக்கு கீழ் 190 மீட்டர் நீளமும் 25 மீட்டர் அகலமும் உடைய பகுதி ரூ.62 லட்சம் செலவிலும் புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டது.  இப்படி ஒவ்வொரு பகுதியும் பல லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டது. 
    நேரு பிளேஸ் மேம்பாலத்துக்கு கீழுள்ள பகுதியில் இசைக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இசைக் கருவிகளை வயது வேறுபாடின்றி மக்கள் இசைத்து மகிழலாம். எல்லா இடங்களிலும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு வசதியாக நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றனர் மாநகராட்சி அதிகாரிகள். 
    இந்நிகழ்வில்,  தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் பேசியதாவது: தில்லியில் உள்ள மற்ற மாநகராட்சிகளுக்கு முன்னுதாரணமாக தெற்கு தில்லி மாநகராட்சி விளங்குகிறது.  சமூக விரோதிகளின் புகலிடமாக இருந்த இடங்களை மாநகராட்சி ஊழியர்கள் தங்களின் கடின உழைப்பால் அழகான இடங்களாக மாற்றியுள்ளனர். 
    தெற்கு மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை மற்ற மாநகராட்சிகள் பின்பற்ற வேண்டும். 2018 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மேம்பாலங்களின் கீழே உள்ள பகுதிகளையும் அழகுபடுத்த வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
    இந்நிகழ்வில் தெற்கு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்கள், மேம்பாலங்கள் தொடர்பான கையேட்டையும் துணைநிலை ஆளுநர் வெளியிட்டார். தெற்கு மாநகராட்சி நிலைக் குழுத் தலைவர் பூபேந்தர் குப்தா, அவைத் தலைவகர் ஷிக்கா ராய், மாநகராட்சி ஆணையர் புனீத் குமார் கோயல் உள்பட மாநகராட்சி அதிகாரிகள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். 
    லாஜ்பத் நகர் வளைவுச் சாலை மேம்பாலம்,  சௌத் எக்ஸ்டென்சன் வளைவுச் சாலை மேம்பாலம், சாவித்திரி புறவளைவுச் சாலை மேம்பாலம்,  ஆப்பிரிக்கா அவென்யு மேம்பாலம், சாராய் காலே கான் வளைவுச்சாலை மேம்பாலம்,  நேரு பிளேஸ் புறவளைவுச்சாலை மேம்பாலம்,  கால்காஜி புறவளைவுச் சாலை மேம்பாலம்,  பிஜ்வாஸன் மேம்பாலம்,  பாலம் மேம்பாலம், திலக் நகர் மேம்பாலம்,  மாயாபூரி மேம்பாலம்,  ராஜா கார்டன் மேம்பாலம் ஆகிய  மேம்பாலங்களுக்கு கீழான பகுதிகள் தெற்கு மாநகராட்சியால் இதுவரை புனரமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai