Enable Javscript for better performance
மாநிலங்களவைத் தேர்தல்: ஆம் ஆத்மி சார்பில் சஞ்சய்  சிங், ஆசுதோஷ் போட்டி?- Dinamani

சுடச்சுட

    

    மாநிலங்களவைத் தேர்தல்: ஆம் ஆத்மி சார்பில் சஞ்சய்  சிங், ஆசுதோஷ் போட்டி?

    By DIN  |   Published on : 01st January 2018 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநிலங்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட சஞ்சய் சிங்,  ஆசுதோஷ் ஆகியோருக்கு  வாய்ப்பு வழங்கப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
    மாநிலங்களவைத் தேர்தல்: தில்லி உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் காலியாகும் 5 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான வாக்குப் பதிவு ஜனவரி 16-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம்  கடந்த 22-ஆம் தேதி அறிவித்தது. 
    தில்லியில் 3 இடங்களும்,  உத்தர பிரதேசம்,  சிக்கிம் மாநிலங்களில் தலா ஒரு இடமும் காலியாகிறது. இதையடுத்து புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய இறுதி நாள் ஜனவரி 5-ஆம் தேதியாகும்.  வாக்குப் பதிவு ஜனவரி 16-ஆம் தேதி நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு முடிவுகளும் அறிவிக்கப்படும். 
    வாய்ப்பு: இந்நிலையில்,  இத்தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி  கட்சியின் மூத்தத் தலைவர்களாக உள்ள ஆசுதோஷ்,  சஞ்சய் சிங் ஆகியோரது பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: மூன்று இடங்களில் ஒரு இடத்தை சஞ்சய் சிங்குக்கு அளிக்க கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பான ஆவணங்களை தயார் செய்யுமாறு அவருக்கு கூறப்பட்டுள்ளது. 
    மேலும் இரண்டு இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அடுத்த வாரத்தில் இறுதி செய்யப்படும்' என்றார்.
    சுட்டுரையில்  வாழ்த்து: இந்நிலையில், சஞ்சய் சிங் போட்டி தொடர்பாக ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர் சோம்நாத் பார்தி தனது  சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட கட்சியின் சார்பில் சஞ்சய் சிங் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.  அனைத்து அம்சங்களிலும் சஞ்சய் சிங் பொருத்தமானவர்.  எல்லோருடைய ஊகப் பட்டியலிலும் அவருடைய பெயர் இடம்பெற்றது. சஞ்சய் சிங்குக்கும், ஆம் ஆத்மி கட்சியினருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள்' எனத் தெரிவித்துள்ளார்.
    சோம்நாத் பார்தியின் டுவிட்டர் கருத்தை, மற்றொரு ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினரான அல்கா லம்பாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.  அதில், "மாநிலங்களவைக்கு ஆசுதோஷும்  தேர்வு செய்யப்படவுள்ளதாக அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்' எனத் தெரிவித்துள்ளார். 
    தற்போது, தில்லியிலிருந்துதேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி வகித்து வரும்  ஜனார்தன் துவிவேதி,  பர்வேஸ் ஹாஸ்மி,  கரண் சிங் ஆகியோரது பதவிக் காலம் ஜனவரி 27-ஆம் தேதியுடன்  நிறைவடைகிறது.  சட்டப்பேரவையில் 67 உறுப்பினர்களைக் கொண்டு பெரும்பான்மை பலத்துடன் உள்ள ஆம் ஆத்மி கட்சி மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai