வாகன நிறுத்துமிடத் தகராறு: கேளிக்கை விடுதிக்குள் இளைஞரை துப்பாக்கியால் சுட்டவர் கைது
By DIN | Published on : 01st January 2018 12:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கேளிக்கை விடுதிக்குள் 30 வயது இளைஞரைத் துப்பாக்கியால் சுட்ட நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து தில்லி காவல் துறையின் தெற்கு மாவட்ட துணை ஆணையர் ரோமில் பானியா கூறியதாவது:
தெற்கு தில்லி, கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள கேளிக்கை விடுதியில் சம்பவத்தன்று இரவு உமேஷ், வினய் (30) ஆகியோருக்கு இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக வாய்த் தகராறு ஏற்பட்டது.
அப்போது, வினய்யை உமேஷ் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். துப்பாக்கியால் சுடப்பட்டதில் கழுத்துப் பகுதியில் காயமடைந்த நிலையில் வினய், எய்ம்ஸ் மருத்துவமனையின் காய சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அவர் அபாயக் கட்டத்தில் இருந்து தப்பிவிட்டார். இதனிடையே, வினய்யை துப்பாக்கியால் சுட்ட உமேஷை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் எப்போது நிகழ்ந்தது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கேளிக்கை விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன.
சமூக விரோதிகளை கேளிக்கை விடுதிகளுக்குள் நுழைய விடுவது விதிமீறலாகும். இதனால் சம்பந்தப்பட்ட கேளிக்கை விடுதியின் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பாக காவல் துறை மூலம் உரிய துறைக்கு கடிதம் எழுதப்பட உள்ளது.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தெற்கு தில்லி மாவட்டப் பகுதியில் உள்ள கேளிக்கை விடுதிகள், மதுக்கூடங்கள், உணவு விடுதிகளில் நிகழாமல் தடுக்கும் வகையில் பாதுகாவலர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அந்தந்த காவல் நிலைய போலீஸாருக்கு அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.