Enable Javscript for better performance
வீடுகளுக்கே சென்று சேவை வழங்கும் திட்டம்: தில்லி அரசின் முன்மொழிவு மீண்டும் துணைநிலை ஆளுநருக்கு அனுப- Dinamani

சுடச்சுட

    

    வீடுகளுக்கே சென்று சேவை வழங்கும் திட்டம்: தில்லி அரசின் முன்மொழிவு மீண்டும் துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்படும்

    By DIN  |   Published on : 01st January 2018 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வீடுகளுக்கே சென்று அரசின் சேவைகளை வழங்கும் திட்டத்திற்கான முன்மொழிவை மீண்டும் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலின் ஒப்புதலுக்கு உரிய பதில்களுடன் தில்லி அரசு அனுப்பி வைக்கும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
    பொது மக்களின் வீடுகளுக்கே சென்று சேவை அளிக்கும் திட்டத்திற்கான முன்மொழிவை தில்லிஅரசு தயாரித்துள்ளது. இத்திட்டத்தின்படி,  யாருக்காவது அரசு தொடர்புடைய சான்றிதழ் உள்ளிட்ட சேவைகள் தேவைப்படும்பட்சத்தில் கால் சென்டரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள வேண்டும்.  தங்களுக்கு தேவைப்படும் சான்றிதழ் குறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும். 
    இதையடுத்து,  கால் சென்டர் ஊழியர் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு நேரில் சென்று சான்றிதழ் கோருவதற்கான ஆவணங்களைப் சரிபார்ப்பார். கருவிழி, கைரேகை உள்ளிட்ட அடையாளங்களை பெற்றுச் செல்வார். பின்னர் தேவைப்படும் சான்றிதழ் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படும்.  இதை வீடுகளுக்கே சென்று சேவை வழங்கும் திட்டம் என தில்லிஅரசு கூறி வருகிறது. 
    இத்திட்டத்தின்கீழ் ஓட்டுநர் உரிமம்,  குடும்ப அட்டைகள்,  சாதிச் சான்றிதழ்கள் உள்பட பொதுமக்கள் சார்ந்த 40 சேவைகள் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 
    இந்த திட்டத்திற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுக்கு கோப்பு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இதில் சில ஆட்சேபங்களைத் தெரிவித்து முன்மொழிவை துணைநிலை ஆளுநர் திருப்பி அனுப்பிவைத்தார். அதில்,  சேவைகள் தொடர்பாக குடியிருப்புகளுக்கும்,  வீடுகளுக்கும் அரசுப் பணியாளர்கள் சென்று வந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.  காற்று மாசும்,  ஊழலும் அதிகரிக்கும். பெண்கள், முதியோரின் உயிர், உடைமை பாதுகாப்புக்கு பிரச்னை ஏற்படும். அரசுக்கும், பொதுமக்களுக்கும் தேவையில்லாத செலவினங்கள் ஏற்படும்  என்பன போன்ற ஆட்சேபங்கள் தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 
    துணைநிலை ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தில்லி முதல்வர் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.  
    பொதுமக்கள் நலன் சார்ந்த திட்டத்தை எதிர்ப்பதன் மூலம் ஊழல் அமைப்பை பாதுகாக்க துணைநிலை ஆளுநர் முயற்சி செய்கிறாரா என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா  கேள்வி எழுப்பியிருந்தார்.
    "இணையதள சேவைகள் இருந்தபோதிலும் பொதுமக்கள் தங்களது ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காக ஓரிரு முறை அரசு அலுவலகங்களுக்கு சென்று வரத்தான் வேண்டியுள்ளது.  வீடுகளுக்கே சென்று  பீஸா வழங்குவது போலத்தான் இந்தச் சேவையும்' என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் "ஆவணங்கள்போல பீஸாவை பதிவிறக்கம் செய்ய முடியாது' என்று கூறியிருந்தார். 
    இதற்கு பதில் அளித்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, "இணையதளத்தில் பீஸாவை பதிவிறக்கம் செய்ய முடியாதது போல சான்றிதழ் கோரும் மனிதரையும் இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்து சரிபார்த்தலுக்காக அரசு அலுவலகத்திற்கு அனுப்ப முடியாது' என்றார்.  இதனால்,  மத்திய அரசுக்கும், தில்லி அரசுக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறுகையில், "வீடுகளுக்கே சென்று சேவை வழங்கும் திட்ட முன்மொழிவு விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் எழுப்பிய ஆட்சேபங்களுக்கு உரிய விரிவான பதிலுடன் மீண்டும் அந்த முன்மொழிவு அவருக்கே அடுத்த சில தினங்களில் அனுப்பிவைக்கப்படும்.  
    தற்போது துணைநிலை ஆளுநரின் ஆட்சேபங்களுக்கு பதில் தயாரிக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்த முன்மொழிவானது தில்லி மக்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai