2017-இல் அனைத்து துறைகளிலும் கேஜரிவால் அரசு தோல்வி: விஜேந்தர் குப்தா சாடல்
By DIN | Published on : 01st January 2018 12:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
2017-ஆம் ஆண்டில் அனைத்து துறைகளிலும் தில்லியை ஆட்சி செய்யும் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு தோல்வி கண்டுள்ளது என எதிர்க் கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா சாடினார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
பாமர மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வுகாண முதல்வர் கேஜரிவால் முயற்சி செய்யவில்லை. துணைநிலை ஆளுநருடனும், மத்திய அரசுடனும் அவர் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். பட்ஜெட்டில் அளித்த வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
2017-ஆம் ஆண்டில் தில்லியில் வளர்ச்சி தேங்கிவிட்டது. கோவா, பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி தோல்வியடைந்தது. தில்லி மாநகராட்சித் தேர்தலிலும் குறிப்பிடத்தக்க வெற்றி ஆம் ஆத்மிக்கு கிடைக்கவில்லை.
தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது ஊழல் குற்றச்சாட்டை அமைச்சராக இருந்த கபில் மிஸ்ரா முன்வைத்தார். லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் உணவுத் துறை அமைச்சராக இருந்த ஆசிம் கான் நீக்கப்பட்டார். தில்லி சார்நிலை பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வானது, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. மகளிர் பாதுகாப்பு, இருள் நிறைந்த பகுதிகளில் மின் விளக்கு அமைத்தல், பேருந்துகளில் மார்ஷல்கள் நியமனம், குடிசைவாசிகளுக்கு கான்கிரீட் வீடுகள் வழங்குதல், அங்கீகாரமற்ற காலனிகளை முறைப்படுத்துதல் என அனைத்திலும் கேஜரிவால் அரசு தோல்விகண்டுள்ளது' என்றார் விஜேந்தர் குப்தா.