Enable Javscript for better performance
திறந்த வெளிக் கழிப்பிடமல்லாத மாநகராட்சியாக "என்டிஎம்சி' அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திறந்த வெளிக் கழிப்பிடமல்லாத மாநகராட்சியாக "என்டிஎம்சி' அறிவிப்பு

    By DIN  |   Published on : 02nd January 2018 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட 104 வார்ட்டுகளிலும் போதுமான எண்ணிக்கையில் கழிப்பிடங்கள் உள்ளன. இதனால், திறந்த வெளியை கழிப்பிடமாக மக்கள் பயன்படுத்தாத மாநகராட்சியாக வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) உருவாகியுள்ளது என்று மேயர் ப்ரீத்தி அகர்வால் தெரிவித்தார். 
    இது தொடர்பாக அவர் கூறியதாவது:
    பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான "தூய்மை இந்தியா' திட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட 104 வார்ட்டுகளிலும் போதுமான அளவு பொதுக்கழிப்பிடங்கள் மாநகராட்சியின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளன. 
    மேலும், 314 சமுதாய கழிப்பறை வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகங்களில் ஆண்களுக்கு 3,508 கழிவறைகள், பெண்களுக்கு 3,232 கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு பொதுக் கழிப்பிடங்களில் ஆண்களுக்கு 2,063 கழிப்பறைகள், பெண்களுக்கு 3,256 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    மேலும், எரிபொருள் நிரப்பும் இடங்கள், உணவகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், தில்லி மேம்பாட்டு ஆணைய சந்தைப் பகுதிகள் ஆகியவற்றிலும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை மக்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தெளிவாக அறிவுறுத்தியுள்ளோம். மக்களின் தேவையை உணர்ந்து கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இக்கழிப்பறைகளை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் தூய்மையாகப் பேணுகிறார்கள். கழிப்பறைகளின் சுகாதாரம் குறித்து தங்களது கருத்துகளை மாநகராட்சி இணையத்தளத்தில் மக்கள் தெரிவிக்கலாம் என்றார் அவர்.
    இதைத் தொடர்ந்து, திறந்த வெளி கழிப்பிடமில்லாத மாநகராட்சியாக வடக்கு தில்லி மாநகராட்சியை மாற்றிய அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் மதூப் வியாஸ் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். பின்னர், வடக்கு தில்லி மாநகராட்சி சார்பில் அச்சடிக்கப்பட்ட 2018-ஆம் ஆண்டுக்கான நாள்குறிப்பை (டைரி) மேயர் ப்ரீத்தி அகர்வால், ஆணையர் மதூப் வியாஸ் ஆகியோர் வெளியிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai