Enable Javscript for better performance
புத்தாண்டு கொண்டாட்டம்: தில்லி காற்று மாசு அபாயகர கட்டத்தை எட்டியது!- Dinamani

சுடச்சுட

    

    புத்தாண்டு கொண்டாட்டம்: தில்லி காற்று மாசு அபாயகர கட்டத்தை எட்டியது!

    By DIN  |   Published on : 02nd January 2018 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புத்தாண்டு தினத்திலும் தில்லியின் காற்று மாசு அபாயகரமான கட்டத்தில் இருந்தது. எனினும், தில்லிவாசிகள் காற்று மாசுவையும் பொருட்படுத்தாமல் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று உற்சாகமாக புத்தாண்டை கொண்டாடினர்.
    இதனால் கனாட்பிளேஸ், இந்தியா கேட் அருகே உள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    தில்லியில் திங்கள்கிழமை அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவியது. ஞாயிற்றுக்கிழமை இரவு தில்லிவாசிகள் பட்டாசுகளை வெடித்து புத்தாண்டை வரவேற்றதால், அந்தப் புகை அடர்பனியுடன் சேர்ந்தது. இதனால் திங்கள்கிழமை காலை தில்லியே பனிப்புகை மூட்டமாக காட்சியளித்தது.
    மேலும், தில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை இந்தப் பருவ சராசரி அளவை விட ஒரு டிகிரி குறைந்து 5.7 டிகிரியாக பதிவானது.
    அடப்பனியுடன் புகையும் சேர்ந்ததால் தில்லியின் காற்றின் தர அளவு 400ஆக பதிவானது. இந்த அளவு ஞாயிற்றுக்கிழமை 398-ஆக இருந்தது. பி.எம். 2.5 காற்று மாசு குறியீடு 311-ஆகவும்,  பிஎம் 10 காற்று மாசு குறியீடு 471.5-ஆகவும் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு பதிவாகியதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. இந்த அளவு பிஎம் குறியீடு 2.5 - 300-யும், பிஎம்10 குறியீடு 500-யும் தாண்டினால் அபாயகரமான கட்டத்தில் காற்று மாசு இருப்பதாக எடுத்துக் கொள்ளப்படும். இந்த தரக் குறியீடு அளவு பிஎம்2.5 - 60-ஆகவும், பிஎம்10- 100-ஆகவும் இருக்க வேண்டும்.
    தில்லியின் காற்று மாசு அபாயகரமான கட்டத்தை எட்டியதற்கு, அடர்பனியில் கலந்துள்ள மாசே காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அடர்பனியின் தாக்கம் குறையும்போது, தில்லியின் மாசு குறையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 
    தில்லியில் நிலவிய கடுமையான அடர்பனி மூட்டத்தின் காரணமாக 300 விமானங்கள், 400 ரயில்களின் சேவைகளில் தாமதம் ஏற்பட்டது. தில்லி விமான நிலையத்தின் ஓடுபாதை காண்புதிறன் அளவு 100- 125 மீட்டர்களாக இருந்தது. இதனால், விமானங்கள் புறப்படுவதில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. 
    இதுகுறித்து விஸ்தாரா விமான நிறுவனத்தின் தலைமை வியூகம் மற்றும் வணிக அதிகாரி சஞ்சீவ் கபூர் தனது சுட்டுரை (டுவிட்டர்) வலைப் பக்கத்தில், "இந்த பாதிப்பு குறித்து செய்துள்ள பதிவில், "கடும் பனி மூட்டம் காரணமாக அனைத்து விமானங்கள் புறப்பாடும் முடங்கிவிட்டன.  மேலும்,  புறப்படவிருந்த விமானங்கள் தாமதமானதால் தரையிறங்க வேண்டிய விமானங்களுக்கு தடங்கல் ஏற்பட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்.
    இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் வானிலை மையத்தின்அதிகாரி கூறுகையில், "அடர் பனி மூட்டத்தின் தாக்கம் அதிகாலை தொடங்கி காலை 11மணி வரை நீடித்தது. ஏற்கெனவே அடர் பனி மூட்டம் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதியில் லக்னௌ,  வாராணசி, கயா, பாட்னா,  அலகாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததால் தில்லியிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
    ரயில் சேவையிலும் பாதிப்பு:  கடும் பனி மூட்டம் காரணமாக தில்லியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு புறப்பட்டுச் செல்லவிருந்த 15 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. 400 ரயில்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது. 20 ரயில்களின் நேர அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டதாக வடக்கு ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
    போக்குவரத்து நெரிசல்: அடர்பனி மூட்டம் காரணமாக சாலைகளில் காண்புதிறன் வெகுவாக குறைந்தது. இதனால்,  பெரும்பாலான கார்கள், பேருந்துகள்  முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன.  ஐ.டி.ஓ. உள்ளிட்ட முக்கிய சாலைச் சந்திப்புப் பகுதிகளில் பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், புத்தாண்டு விடுமுறையையொட்டி முக்கியப் பகுதிகளில் மக்கள் அதிக அளவில் கூடியதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai