Enable Javscript for better performance
போலி துப்பாக்கியைக் காட்டி கார்களைவழிப்பறி செய்த  6 பேர் கும்பல் கைது- Dinamani

சுடச்சுட

    

    போலி துப்பாக்கியைக் காட்டி கார்களை வழிப்பறி செய்த  6 பேர் கும்பல் கைது

    By DIN  |   Published on : 02nd January 2018 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெற்கு தில்லியில் போலி துப்பாக்கியைக் காட்டி பொதுமக்களிடம் கார்களை வழிப்பறி செய்த 6 பேர் கும்பலை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கார்கள் மீட்கப்பட்டதாக  போலீஸார் தெரிவித்தனர்.
    இது குறித்து தென்கிழக்கு தில்லி  காவல் சரக துணை ஆணையர் சின்மயி பிஸ்வால் கூறியதாவது:  
    தில்லி ஜசோலா வணிக வளாகம் பகுதி முன்பாக சம்பவத்தன்று இரவு வாடகை டாக்ஸியை அதன் ஓட்டுநர் ஆபித் ஓட்டி சென்று கொண்டிருந்தார்.  
    அப்போது, அந்த வழியாக மற்றொரு காரில் வந்த சிலர் அவரிடம் எய்ம்ஸ் மருத்துவமனை செல்வதற்கான வழி குறித்து கேட்டனர்.  ஆபித் தனது காரை நிறுத்திவிட்டு பதில் கூறிக் கொண்டிருந்தார். அப்போது, அந்தக் கும்பல் அவரை பலவந்தமாக கட்டிப்போட்டு வாயைப் பொத்தியது. 
    பின்னர், அவரிடமிருந்து செல்லிடப்பேசி,  ரூ.9 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வழிப்பறி செய்தது. அதைத் தொடர்ந்து,  ஓக்லா மண்டி பகுதியில் அதே கும்பல் காரில் சென்றது. அங்கு வாடகை காரில் சென்று கொண்டிருந்தவரிடம் மீண்டும் முகவரி கேட்பது போல் நடித்து அணுகியது.  அப்போது, காரின் ஓட்டுநர் ஜன்னலைத் திறந்து பதில் கூற முயலவே,  அந்தக் கும்பல் அவரிடம் போலி துப்பாக்கியைக் காட்டி மிரட்டி காரை வழிப்பறி செய்தது. 
    அதைத் தொடர்ந்து, அதே இரவு அதே காரில் நொய்டா பகுதிக்கு  சென்ற  அக்கும்பல்,  ஃபரீதாபாத் செல்லவிருந்த  இருவருக்கு "லிப்ட் ' தருவதாகக் கூறி காரில் ஏற்றியது. பின்னர்,  அவர்கள் இருவரையும் மிரட்டி பொருள்கள், பணத்தைப் பறித்துச் சென்றது. இச்சம்பவங்கள் தொடர்பாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன.  கார் வழிப்பறி கும்பலைப் பிடிக்க   காவல் உதவி ஆணையர் தால் சிங் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இப்படையினர் தீவிர விசாரணை நடத்தி தரம் வீர் (எ) தம்மு (21),  முகம்மது சாஹிப் (19), ரவி (எ) கௌதம் (26),  ராஜு (19), விக்கி (19),  ஹிரா (19) ஆகிய 6 பேரைக் கைது செய்தனர். இக்கும்பல் இரண்டு வாரத்தில் பலரிடம் கார் வழிப்பறியில்  ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.  வழிப்பறி செய்யப்பட்ட 2 கார்கள் மீட்கப்பட்டன. இக்கும்பலின் முக்கிய மூளையாக தரம் வீர் செயல்பட்டது தெரிய வந்தது என்றார் அந்த அதிகாரி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai