இடிஎம்சி விளையாட்டு மைதானங்கள் விரைவில் புனரமைப்பு
By DIN | Published on : 03rd January 2018 12:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கக்ரோலா, மதிப்பூர், ஹரிநகர், தில்லி கேட் ஆகிய பகுதிகளில் உள்ள கிழக்கு தில்லி மாநகராட்சிக்கு (இடிஎம்சி) சொந்தமான விளையாட்டு மைதானங்களை இந்திய விளையாட்டு ஆணைய நிபுணர்களின் உதவியுடன் சிறுவர்களுக்கு உகந்த வகையில் விரைவில் புனரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு தில்லி மாநகராட்சி மேயர் கமல்ஜீத் ஷெராவத், நிலைக் குழுத் தலைவர் புபேந்தர் குப்தா, அவைத் தலைவர் ஷிக்கா ராய் ஆகியோர் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜவர்தன் ரத்தோரை செவ்வாய்கிழமை சந்தித்துப் பேசினர்.
இச்சந்திப்பு குறித்து நிலைக் குழுத் தலைவர் புபேந்தர் குப்தா கூறியதாவது: ஆரம்பப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறப்பான விளையாட்டு வசதிகளைச்செய்து கொடுப்பது தொடர்பாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரைச் சந்தித்து பேசினோம். கிழக்கு தில்லி மாநகராட்சியின் விளையாட்டு மைதானங்களை சிறுவர்களுக்கேற்ற வகையில் மாற்றியமைக்க இந்திய விளையாட்டு ஆணையத்தின் நிபுணர்களின் உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். இந்த புனரமைப்புப் பணிகள் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளன. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மிக விரைவில் கையொப்பமாகவுள்ளது. இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, மல்யுத்தம் போன்றவற்றை சிறுவர்களிடையே பரப்பும் வகையில் 1 ஏக்கர் பரப்பளவில் புதிதாகவிளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளதுஎன்றார் அவர்.