Enable Javscript for better performance
உணவுக் கலப்படத்தைத் தடுக்க  கடுமையான சட்டம் தேவை: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    உணவுக் கலப்படத்தைத் தடுக்க  கடுமையான சட்டம் தேவை: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 03rd January 2018 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உணவுக் கலப்படத்தைத் தடுக்க கடுமையான சட்டம் அவசியம் என்று மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தியது. இது தொடர்பாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் முன்வைத்த சிறப்புக் கவனக் கோரிக்கை: 
    நாடு முழுவதும் உணவுக் கலப்படம் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மக்களின் உடல் நலத்திற்கு தீங்கிழைப்பதாக உள்ள உணவுக் கலப்படத்தைத் தடுக்க தற்போதைய சட்டங்கள் போதுமான வகையில் இல்லை. 
    1954-ஆம் ஆண்டு சட்டம், மாமிச உணவு உத்தரவு 1973, பால் மற்றும் பால் தயாரிப்புகள் உத்தரவு 1992 உள்பட பல்வேறு சட்டங்கள் திருத்தப்பட்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டமானது 2010-ல் நடைமுறைக்கு வந்தது. 
    இந்தப் புதிய சட்டத்தைப் பொருத்தமட்டில் பல்வேறு குற்றங்களுக்கான தண்டனையை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், 3 மாதங்கள் முதல் 6 மாதங்களாக தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளது. உணவு கலப்படத்தை ஒரு தீவிரமான குற்றமாகக் கருதி குற்றத்தின் தன்மையைப் பொருத்து ஆயுள் தண்டனை வரை வழங்கக்கூடிய அளவுக்கு இந்திய தண்டனை சட்டத்தின் 272, 273 பிரிவுகளை திருத்தியமைக்க சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. உணவுக் கலப்படத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அளிக்க நீதிமன்றம் உத்தரவிடும் வகையில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 375- ஆவது பிரிவை திருத்தி அமைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ். சௌகான் தலைமையிலான குழுவும் பரிந்துரை செய்துள்ளது.
    வெளிச்சந்தையில் விற்கப்பட்டு வரும் பல்வேறு பால் மற்றும் தயாரிப்பு பொருள்கள் தரம் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மென் பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் சிலவற்றில் மிகவும் தீமை தரும் சேர்மானங்களைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
    எனவே, உணவுக் கலப்படத்தைத் தடுக்க தண்டனையை கடுமையாக்கும் வகையில் உணவுப் பாதுகாப்பு, தரநிர்ணயச் சட்டத்தை விரிவான மறுஆய்வுக்கு உள்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்.வைத்திலிங்கம் கேட்டுக் கொண்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai