Enable Javscript for better performance
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கைவிட வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய மருத்துவ ஆணைய மசோதாவைக் கைவிட வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வலியுறுத்தியது.இது தொடர்பாக மக்களவையில் பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவையின் கவனத்திற்குக் கொண்டு வரும் பூஜ்ய நேரத்தில் பொள்ளாச்சி தொகுதி அதிமுக உறுப்பினர் சி.மகேந்திரன் முன்வைத்த கோரிக்கை:
    மத்திய அரசு கொண்டு வரவுள்ள "தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2017' பல்வேறு குறைபாடுகளைக் கொண்டுள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்கப்படும் போது, அதில் உறுப்பினர்களாக மருத்துவர் அல்லாதோரை நியமிப்பது மருத்துவத் துறைக்கு தீங்கு இழைக்கும். இதனால், மாநிலத்தில் இருந்து தேர்வாகும் உறுப்பினர் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். இது மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதாகவே கருதப்படும். 
    மேலும், இப்புதிய மசோதாவில் உள்ள ஷரத்து 49-இன்படி இந்தியாவில் முறையாக பயின்று பதிவுபெற்ற மருத்துவர்கள் தவிர, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் யுனானி மருத்துவர்களுக்கு ஒரு குறுகிய காலப் பயிற்சி அளித்து அவர்களும் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கலாம் என்பது பொதுமக்களுக்கு தீங்கிழைக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த மசோதாவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
     மருத்துவப் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புக்கான தேசிய தகுதிகாண் தேர்வை (நீட்) நடத்துவது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று கருதிதான் மறைந்த ஜெயலலிதா இத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தினார். இந்த மருத்துவ ஆணைய மசோதா மூலம் மேலும் பல உரிமைகள் பறிபோகும் நிலை ஏற்படும். எனவே, மக்களின் நலன் கருதியும், மாநிலங்களின் உரிமைகள் பறிபோகாத வகையிலும் "தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2017'-ஐ திரும்பப் பெற வேண்டும். மேலும், இதற்கென ஒரு சிறப்பு நாடாளுமன்ற நிலைக் குழு அமைத்து, ஆலோசனை பெற்று மசோதாவில் உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai