Enable Javscript for better performance
மதுரை விமான நிலையத்துக்கு  "தேவர்' பெயர் சூட்டப்படுமா? மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்- Dinamani

சுடச்சுட

  

  மதுரை விமான நிலையத்துக்கு  "தேவர்' பெயர் சூட்டப்படுமா? மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்

  By DIN  |   Published on : 03rd January 2018 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டுவது தொடர்பாக மாநிலங்களவை பாஜக உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி எழுப்பிய கேள்விக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு விளக்கம் அளித்தார்.
  இது தொடர்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்வி எழுப்பிய சுப்பிரமணியன் சுவாமி, "முத்துராமலிங்கத் தேவர் மிகப்பெரிய சுதந்திரப் போராட்டத் தியாகி.  சுபாஷ் சந்திர போஸுடன் இருந்தார் என்பதால்  அவர்  புறக்கணிக்கப்படுகிறார்.  
  அவரது பெயரை மதுரை விமான நிலையத்துக்கு சூட்டுவது தொடர்பாக 1990-இல் நான் மதுரை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு முயற்சி மேற்கொண்டேன். அப்போதிலிருந்து இந்த விவகாரம் நிலுவையில் இருந்து வருகிறது.  மாநிலத்தில் ஆட்சி செய்த அரசு இதில் ஆர்வம் காட்டவில்லை.  தற்போது, தமிழகத்தில் புதிய அரசு இருப்பதால் இந்த விவகாரத்தை மத்திய அமைச்சர் மீண்டும் மாநில அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வாரா?' என்று கேள்வி எழுப்பினார்.
  இதற்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு பதில் அளித்துப் பேசுகையில், "விமான நிலையங்களின் பெயரை மாற்றுவது தொடர்பாக  மாநில சட்டப்பேரவைகளில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.  அதன் பரிந்துரையின்அடிப்படையில்தான் விமான நிலையங்களின் பெயர் மாற்றப்படுகின்றன. தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில்,  தமிழக அரசு 2001 மற்றும் 2005-இல் ஓர் உத்தரவை வெளியிட்டிருந்தது. அதில், மாநிலத்தில் உள்ள அரசுக் கட்டடங்கள், இடங்கள் அல்லது மாநகராட்சிகளுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட மாட்டாது எனக் கூறப்பட்டிருந்தது.  தற்போதுள்ள அரசு இது தொடர்பாக முன்மொழிவு அனுப்பினால்,  அதற்கு மத்திய அரசு  எதிர்ப்புத் தெரிவிக்காது. தேவர் மீது நாங்கள் மிகவும் மதிப்பு வைத்துள்ளோம்' என்றார். 
  அப்போது,  மாநிலங்களவைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு, "அரசியல் கட்சிகளிடம் தங்களது தலைவர்கள் அல்லது தங்களுக்கு நெருக்கமானவர்களின் பெயரை விமான நிலையங்கள் அல்லது கட்டடங்களுக்கு சூட்டுவதற்கான மனோபாவம் இருப்பதால், தமிழகத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்திருக்கலாம்.  அடுத்து அமையும் அரசானது பின்னர் அவற்றை மாற்றும் நடைமுறையைத் தொடங்குகிறது'  என்றார்.
   அவர் மேலும் கூறுகையில், "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தென் இந்தியாவில் உள்ள புரட்சிகரமான பெயர்களில் ஒன்று.  
  சுபாஷ் சந்திர போஸுடன் அன்றைய காலக் கட்டத்தில் அவர் இணைந்து ஆற்றிய பங்களிப்பு,  அவருடைய ஆளுமை ஆகியவை குறித்து அனைவரும் பாராட்டியுள்ளனர்.  அவர் அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்றப்பட்ட  தலைவர்' என்றார்.
  இல.கணேசன் ஆதரவு: அப்போது, பாஜக உறுப்பினர் இல.கணேசன், "எந்த  அரசியல் தலைவர்களின் பெயரையும் சூட்டக் கூடாது என தமிழக அரசு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.  தலைவர் (வெங்கய்ய நாயுடு)  கூறுவது போல் முத்துராமலிங்கத் தேவரை ஒரு அரசியல் தலைவராக மட்டுமே பார்க்கக் கூடாது. அவர் ஒரு தேசியவாதியாகத் திகழ்ந்தவர்.  இதனால்,  தேசிய உணர்வைக் கருத்தில் கொண்டும்  அரசியல் கட்சிகள்,  சாதிகளைக் கடந்து இக்கோரிக்கையை ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.  இதுபோன்று இதர உறுப்பினர்களும் வலியுறுத்தவே, அமைச்சர் கஜபதி ராஜு,  "இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசிடம் விசாரிக்கபடும்' என்றார்.
  இக்கோரிக்கைப் போன்று,  சண்டீகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயரைச் சூட்டக் கோரும் விவகாரத்தை  காங்கிரஸ் உறுப்பினர் அம்பிகா சோனி எழுப்பினார்.  
  அதேபோன்று, ஒளரங்காபாத் விமான நிலையத்தின் பெயரை மாற்றும் கோரிக்கையும் எழுப்பப்பட்டது.  அப்போது, அமைச்சர் கஜபதி ராஜு, "விமான நிலையத்தின் பெயரை மாற்றும் விவகாரம் தொடர்பாக 9 முன்மொழிவுகளை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் பரிசீலித்து வருகிறது' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai