"ஒரு குடும்பம், ஒரு கார்' திட்டத்தை உருவாக்கக் கோரிய மனு தள்ளுபடி
By DIN | Published on : 04th January 2018 12:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தில்லி, தேசியத் தலைநகர் வலயத்தில் "ஒரு குடும்பம், ஒரு கார்' விதிகளுடன் தனியார் வாகனங்களின் பதிவுக் கொள்கைத் திட்டத்தை உருவாக்க உத்தரவிடக் கோரி தாக்கலான மனுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இது தொடர்பான மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின்(பொறுப்பு) தலைவரும், நீதிபதியுமானயு.டி. சால்வி, இந்த மனு முதிர்ச்சியின்றி முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, உரிய அமைப்பை மனுதாரர் அணுகுமாறு உத்தரவிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக வழக்குரைஞர் சஜன் கே சிங், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: தில்லி மற்றும் தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக 1981 முதல் 2001-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தில்லியில் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்தின் வளர்ச்சி மிகவும் அதிகரித்துள்ளது. தனிநபர் பயண விகிதமானது (நடை பயணம் தவிர்த்து) 1981-இல் 0.72 சதவீதமாக இருந்தது. 2001-இல் இது 0.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டால், பயணம் 45 லட்சத்திலிருந்து 118 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், 1981-இல் 5.13 லட்சமாக இருந்த மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை, 2001-இல் 32.38 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோன்று இதே காலக்கட்டத்தில் பேருந்துகளின் எண்ணிக்கையும் 8,600-இல் இருந்து 41,483 ஆக உயர்ந்துள்ளது.
வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையில் உள்ள கார்பன் சுற்றுச்சூழலை பாதித்து வருகிறது. இதனால், மனிதர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் தில்லி, தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் உள்ள தனியார் வாகனங்களின் பதிவுக்காக ஒரு முழுமையான கொள்கைத் திட்டத்தை உருவாக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட வேண்டும். அப்போதுதான், ஒரு குடியிருப்புக்கு ஒரு கார் மட்டும் பதிவு செய்ய அனுமதிக்கப்படும். மாசு அளவில் ஏற்பட்டுள்ள அபாய அதிகரிப்பு காரணமாக தில்லி எரிவாயுக் கூடமாக உருவாகியுள்ளது. அரசு அதிகாரிகள் அலட்சியம் காரணமாகவே சுற்றுச்சூழல் சீர்கெட்டுப் போயுள்ளது. நகரில் மாசு அதிகரிக்க அதிக எண்ணிக்கையில் உள்ள தனியார் மற்றும் வணிக வாகனங்கள் முக்கிய காரணமாக உள்ளன. இதனால், தனியார் மற்றும் வணிக வாகனங்கள் கட்டுப்பாடு இல்லாமல் வாங்கப்படுவது ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்' என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.